சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலி அரியலூரில் மேலும் 3 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அரியலூரில் மேலும் 3 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

Update: 2017-04-01 23:00 GMT
அரியலூர்,


அரியலூர் நகராட்சி பகுதியில் ஜெயங்கொண்டம் சாலை, மேல அக்ரஹாரம், ரெயில்வே கேட், கல்லங்குறிச்சி சாலை உள்பட 5 இடங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. தமிழக அரசு படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்புக்கு பின்னர், அரியலூரில் மேலஅக்ரஹாரம், கல்லங்குறிச்சி சாலை ஆகிய 2 இடங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மீதமுள்ள 3 கடைகள் பார் வசதியுடன் செயல்பட்டு வந்தன.

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

3 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன

அரியலூரில் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை உள்பட 3 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தனியார் நடத்தி வந்த பார்களில் இருந்த மேஜை, நாற்காலிகள் மற்றும் பொருட்களை உரிமையாளர்கள் எடுத்து சென்றனர். மேலும் டாஸ்மாக் கடைகள் முன்பு கடை மூடப்பட்டது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

அரியலூர் நகராட்சி பகுதியில் இயங்கி வந்த 5 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு விட்டதால், மது அருந்துவோர் கிராமப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை தேடி சென்றனர். 

மேலும் செய்திகள்