நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 45 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள்

நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 45 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வினியோகத்தை கலெக்டர் சங்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

Update: 2017-04-01 23:00 GMT

ஊட்டி,

ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட பயிற்சி அரங்கில் வருவாய் துறை சார்பில் புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சங்கர் தலைமை தாங்கி பேசியதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 820 ரே‌ஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி வழங்குவதுடன், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக மாதம் ஒன்றுக்கு ரூ.13.3 கோடி செலவு ஏற்படுகிறது.

மேலும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகம் மூலம் மலிவு விலையில் இட்லி மற்றும் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக ஊட்டி வட்டத்தில் 10 ஆயிரத்து 729 ரே‌ஷன்கார்டுகள் வழங்கப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் 45 ஆயிரத்து 222 ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

பெயர் சேர்த்தல், நீக்குதல்

இனி வரும் காலங்களில் பொதுமக்கள் ரே‌ஷன்கார்டுகளில் பெயர்சேர்க்கவும், நீக்கவும் தாலுகா அலுவலகங்களை தேடி அலைய வேண்டியது இல்லை. பொதுசேவை மையத்தை அணுகி பெயரை சேர்க்கவோ? அல்லது நீக்கிக்கொள்ளவோ ? முடியும். இதன்மூலம் பொதுமக்களின் சிரமம் குறைக்கப்பட்டு உள்ளது.

புதிய ஸ்மார்ட் ரே‌ஷன்கார்டுகள் தயாரானதும் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும். இதன்பின்னர் சம்பந்தப்பட்ட நபர், பொருட்கள் வாங்கும் ரே‌ஷன் கடைக்கு சென்று புதிய ஸ்மார்ட் ரே‌ஷன்கார்டை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன், குன்னூர் சட்ட மன்ற உறுப்பினர் சாந்திராமு, ஊட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குந்தா

குந்தா தாலுகாவில் மொத்தம் 14 ஆயிரத்து 995 குடும்ப அட்டைகள் உள்ளன. இவர்களுக்கு ரே‌ஷன் கார்டுக்கு பதிலாக ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வழங்கும் பணி மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் மணிகாந்தி ஸ்மார்டு ரே‌ஷன் கார்டு வழங்கி தொடங்கி வைத்தார். இதேபோல் கிண்ணக்கொரை, தொட்டகம்பை, கீழ்குந்தா, எடக்காடு, எமரால்டு உள்பட 34 மையங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 50 பேருக்கு ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.

கூடலூர்

கூடலூர் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடைகளில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் நேற்று வழங்கப்பட்டன. பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடையில் ஆர்.டி.ஓ. தினகரன், வட்ட வழங்கல் அலுவலர் அப்துல்ரகுமான், அ.தி.மு.க. நகர செயலாளர் சையத் அனூப்கான் ஆகியோர் ஸ்மார்ட் கார்டை பொதுமக்களுக்கு வழங்கினர்.

மேலும் செய்திகள்