விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல் போராட்டம்: கைதான 7 பேர் திண்டுக்கல் சிறையில் உண்ணாவிரதம்

விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல் போராட்டம்: கைதான 7 பேர் திண்டுக்கல் சிறையில் உண்ணாவிரதம் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Update: 2017-04-01 22:45 GMT

திண்டுக்கல்,

மதுரையில் விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 7 பேர் திண்டுக்கல் சிறையில் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிறையில் உண்ணாவிரதம்

மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் அந்த போராட்டத்தை நடத்தினர். அதன்பிறகு, போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். அன்றைய தினம் நள்ளிரவில் அனைவரையும் மதுரை மத்திய சிறையில் அடைக்க கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

இதனால் அவர்களை 2 குழுக்களாக பிரித்து விருதுநகர், திண்டுக்கல் மாவட்ட சிறைகளில் போலீசார் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்ட சிறையில் முருகானந்தம், முத்துப்பாண்டி, குமரன், சுப்பிரமணி, குமார், அரண்டையன், இரணியன் ஆகிய 7 பேர் அடைக்கப்பட்டனர். அவர்கள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முழுவதும் சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்தனர். சிறைத்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை.

மருத்துவமனையில் சிகிச்சை

இந்த நிலையில், சாப்பிடாமல் இருந்ததால் 7 பேரும் சோர்வடைந்தனர். அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், 7 பேரையும் நேற்று காலையில் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு, மீண்டும் அவர்களை போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.

முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் 7 பேரும் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷம் போட்டனர். அப்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மதுரை போராட்டத்தில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறைக்கு கொண்டு வரப்பட்ட 7 பேரும், உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர்கள் சிறைத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்’ என்றனர்.

மேலும் செய்திகள்