கோவில்பட்டியில் தலைகீழாக நின்று செஸ் விளையாடி வாலிபர் சாதனை
கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முருகானந்தம் (வயது 32), இவர் செஸ் பயிற்சியாளராக உள்ளார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முருகானந்தம் (வயது 32), இவர் செஸ் பயிற்சியாளராக உள்ளார். கோவில்பட்டி– இளையரசனேந்தல் ரோட்டில் உள்ள ஒரு மழலையர் பள்ளிக்கூடத்தில் தலைகீழாக நின்று, செஸ் விளையாடி சாதனை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதன்படி முருகானந்தத்தை தலைகீழாக தொங்க விட்டனர். பின்னர் அவர், சுமார் ஒரு மணி நேரம் தலைகீழாக நின்றவாறு தொடர்ந்து 20 போட்டியாளர்களிடம் அடுத்தடுத்து விளையாடினார். இதில் அவர் 16 பேரிடம் வெற்றி கண்டு சாதனை படைத்தார்.
நிகழ்ச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழக தலைவர் சுரேஷ்குமார், வக்கீல் முருகானந்தம், பள்ளிக்கூட தாளாளர் அமுதவல்லி, மைக்ரோபாய்ண்ட் ஐ.டி.ஐ. தலைவர் ஆம்ஸ்ட்ராங், நாகராஜன், ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.