தாவூத் இப்ராகிமுடன் செல்போனில் உரையாடியதாக முன்னாள் மந்திரி மீது புகார் செய்தவர் கைது

தாதா தாவூத் இப்ராகிமுடன் செல்போனில் உரையாடியதாக மராட்டிய முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே மீது புகார் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-03-31 23:00 GMT
மும்பை,

தாதா தாவூத் இப்ராகிமுடன் செல்போனில் உரையாடியதாக மராட்டிய முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே மீது புகார் செய்தவர் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தங்களது காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மராட்டிய அரசில் வருவாய்த்துறை மற்றும் விவசாயத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் ஏக்நாத் கட்சே. 10 முக்கிய இலாகாக்கள் அவர் வசம் இருந்தன.

செல்போன் உரையாடல்

மராட்டிய மந்திரி சபையில் முதல்-மந்திரிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தை வகித்து வந்தவர். மாநில பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர். ஏக்நாத் கட்சேயின் போதாத காலம் கடந்த ஆண்டு அவர் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அவற்றில் முக்கியமானது பாகிஸ்தானின் கராச்சி நகரில் தலைமறைவாக வாழ்ந்து வரும் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமுடன் செல்போனில் பேசினார் என்பது தான். ஆனால் இந்த குற்றச்சாட்டை ஏக்நாத் கட்சே திட்டவட்டமாக மறுத்தார். தாவூத் இப்ராகிமுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. தாவூத் இப்ராகிமுடன் பேசியதாக கூறப்படுகிற செல்போன் எண் உபயோகத்தில் இல்லை. வேண்டும் என்றே தன் மீது குற்றம் சாட்டப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மந்திரி பதவி ராஜினாமா

மேலும் ஏக்நாத் கட்சே மீது நிலமோசடி புகார்களும் தெரிவிக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்கின. ஏக்நாத் கட்சேயை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மட்டுமல்லாது கூட்டணி கட்சியான சிவசேனாவும் வலியுறுத்தியது.

எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் பதவியில் தொடர்ந்தால், அது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என பா.ஜனதா மேலிடம் கருதியது. இதைத்தொடர்ந்து ஏக்நாத் கட்சே கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

விசாரணை

அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. தாவூத் இப்ராகிமுடன் ஏக்நாத் கட்சே பேசியது உண்மை என குற்றச்சாட்டுகளை தெரிவித்தவர் குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த மனீஷ் பங்கலே(வயது30) ஆவார்.

இந்த விவகாரத்தில் ஏக்நாத் கட்சேவுக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மும்பை ஐகோட்டில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் ஐகோர்ட்டு அவரது மனுவை விசாரணைக்கு உடனடியாக ஏற்கவில்லை. அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மாநில தீவிரவாத தடுப்பு படை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.

கைது

ஆனால் அவர்கள் நடத்திய விசாரணையில், ஏக்நாத் கட்சே மற்றும் தாவூத் இப்ராகிம் இடையே எவ்வித செல்போன் உரையாடலும் நடைபெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஏக்நாத் கட்சே, தாவூத் இப்ராகிமுடன் பேசியதற்கான ஆதாரமாக மனீஷ் பங்கலேயிடம் இருந்து பெறப்பட்ட செல்போன் கட்டண ரசீதுகளை சைபர் குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். இதில், அந்த கட்டண ரசீதுகள் அனைத்தும் கணினி தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக தயார் செய்யப்பட்டவை என்பது தெரியவந்தது.

இந்த போலி செல்போன் கட்டண ரசீதுகளை மனீஷ் பங்கலே தயார் செய்திருந்ததாகவும், அரசில் ரீதியாக ஏக்நாத் கட்சேயின் புகழுங்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் இவ்வாறு செயல்பட்டதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீசார், மனீஷ் பங்கலேவை அவர் வசித்து வந்த மும்பை அண்டாப்ஹில் பங்காலிபுரா பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

மனீஷ் பங்கலே மீது போலீசார் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கோர்ட்டில் ஆஜர்

இதைத் தொடர்ந்து, மனீஷ் பங்கலேவை போலீசார் நேற்று மாலை கில்லா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால் தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் கேட்டனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கைதான மனீஷ் பங்கலேவை வருகிற 6-ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்