டயாலிசிஸ் சிகிச்சையின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி
டயாலிசிஸ் சிகிச்சையின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி நாராயணசாமி வழங்கினார்
புதுச்சேரி,
கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9–ந் தேதி சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு டயாலிசிஸ் (ரத்தம் சுத்திகரிப்பு) சிகிச்சை அளித்த போது திடீரென்று மின்தடை ஏற்பட்டது. ஜெனரேட்டர் இருந்தும் உடனே அந்த சிகிச்சை பிரிவுக்கு மின்சாரம் கிடைக்காததால் அங்கு சிகிச்சை பெற்று வந்த கதிர்காமம் ரமணபுரம் முதல் தெருவை சேர்ந்த சுசிலா(வயது 75), வீமநகர் கருணாஜோதி வீதியை சேர்ந்த அம்சா(55), காந்தி திருநல்லூரை சேர்ந்த கணேசன் (55) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களது குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் முதல்–அமைச்சர் அறையில் நேற்று காலை நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி, உயிரிழந்தவர்கள் 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி, ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.