லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி: ரூ.180 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்

லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலியாக ரூ.180 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. வரத்து குறைந்ததால் காய்கறி விலை உயர்ந்தது.

Update: 2017-03-31 23:00 GMT

திண்டுக்கல்,

லாரிகளுக்கான காப்பீட்டு தொகை உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான மதிப்புக் கூட்டு வரி உயர்வு ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நேற்று முன்தினம் முதல் தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தொடங்கினர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று 2–வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்றும் லாரிகள் ஓடவில்லை. திண்டுக்கல்லில் இருந்து காய்கறிகள், வெங்காயம், நூல், தேங்காய், வாழைக்காய், வாழை இலை போன்றவை அதிக அளவில் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டது. அது 2 நாட்களாக பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

காய்கறிகள்

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக திண்டுக்கல்லில் இருந்து பிற மாவட்டங்கள், கேரளாவுக்கு லாரிகள் கொண்டு செல்வது தடைப்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு வரவில்லை. ஒருசில விவசாயிகள் மட்டும் காய்கறிகளை பறித்து சிறிய சரக்கு வாகனங்களில் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர்.

ஏற்கனவே வறட்சி காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்து விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக காய்கறிகள் வரத்து முன்பை விட குறைந்து விட்டது. இதனால் காய்கறிகள் விலை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

விலை உயர்வு

திண்டுக்கல்லில் நேற்றைய தினம் ஒருகிலோ கத்தரிக்காய் ரூ.70–க்கும், தக்காளி ரூ.30–க்கும், வெண்டைக்காய் ரூ.40–க்கும், சின்ன வெங்காயம் ரூ.50–க்கும் விற்பனை ஆனது. லாரிகள் வேலைநிறுத்தம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும்பட்சத்தில் காய்கறிகளின் விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேநேரம் வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் (பல்லாரி) ஆகியவை குடோன்களில் தேங்கி கிடக்கின்றன. சில வியாபாரிகள் சிறிய சரக்கு வாகனங்கள் மூலம் அரிசி, கோதுமை மாவு, மைதா, சர்க்கரை போன்றவற்றை எடுத்து செல்கின்றனர். இதனால் கூடுதல் செலவு ஏற்பட்ட போதிலும், மளிகை பொருட்கள் விலை உயர்த்தப்படவில்லை.

ஆனால், வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வரத்து முற்றிலும் நின்று போனது. லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும்பட்சத்தில் மளிகை பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.

ரூ.180 கோடி சரக்கு தேக்கம்

வெளிமாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை, பஞ்சு போன்றவற்றின் இறக்குமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திண்டுக்கல்லில் இருந்து லாரிகள் மூலம் நூல், காய்கறிகள், சின்ன வெங்காயம், வாழைக்காய், தானியங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி முடங்கி விட்டது. வார இறுதி நாட்களில் சரக்கு போக்குவரத்து அதிகமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக வந்த சரக்கு லாரிகளும் இங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்க தலைவர் கிருபாகரன் கூறுகையில், லாரிகள் ஓடாததால் சுமார் ரூ.180 கோடி மதிப்பில் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. சரக்கு போக்குவரத்து தடைப்பட்டால் விலைவாசி உயரும். எனவே, லாரி உரிமையாளர்களிடம் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும், என்றார்.

வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள்

இந்த லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பது சுமைதூக்கும் தொழிலாளர்கள் தான். சரக்கு லாரிகள் வராததால் சுமை தூக்கும் தொழிலாளர்கள், டிரைவர்கள் 2 நாட்களாக வேலையின்றி தவிக்கின்றனர். தினமும் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தியவர்கள், அதுவும் கிடைக்காததால் சிரமப்படுகின்றனர். மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்