நாகர்கோவிலில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு

நாகர்கோவிலில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-03-31 22:30 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி அசம்பு ரோட்டை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 50). இவர் மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு தங்கமணி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். தங்கமணி, கூட்டுறவு ஒன்றியத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வடசேரி சக்தி கார்டன் அருகே கட்டப்பட்டு வரும் ஒரு புதிய வீட்டுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக பரமசிவன் சென்றார். அவர் அங்குள்ள ஒரு மின் கம்பத்தில் ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்து விட்டார்.

பரிதாப சாவு

இதில் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரமசிவன் பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்த மின் வாரிய ஊழியர் பரமசிவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்