சொத்தவிளை அருகே தொழிலாளியை வெட்டிய சென்னையை சேர்ந்த 4 பேர் கைது

சொத்தவிளை அருகே தொழிலாளியை வெட்டிய வழக்கில் சென்னையைச் சேர்ந்த 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2017-03-31 22:15 GMT

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவிலை அடுத்த சொத்தவிளை அருகே உள்ள இலந்தவிளையைச் சேர்ந்தவர் இளையராஜ பாண்டியன் (வயது48), தொழிலாளி. இவர் கடந்த 21–ந்தேதி காலை தனது மொபட்டில் சொத்தவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காரில் வந்த ஒரு கும்பல் இளையராஜ பாண்டியனை திடீரென வழி மறித்து அரிவாளால் வெட்டியும், பயங்கர ஆயுதங்களாலும் தாக்கினர். இதில் இளையராஜ பாண்டியன் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார். பொதுமக்கள் அங்கு வரவே அந்த கும்பல் காரில் தப்பிச்சென்றது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளையராஜ பாண்டியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன், சப்–இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

சொத்து தகராறு

அப்போது சொத்து பிரச்சினை காரணமாக இளையராஜ பாண்டியன் வெட்டப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கொலை முயற்சி உள்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் இளையராஜ பாண்டியனின் உறவினர் ஒருவர் சென்னையில் வசித்து வருகிறார். அவருடைய மகன் வந்து இளையராஜ பாண்டியனிடம் வந்து சொத்து தகராறு செய்து வந்துள்ளார்.

எனவே அவர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சென்னை விரைந்து சென்றனர். இதுதொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பாடி கலைவாணன் நகரைச் சேர்ந்த சுரேஷ்(28), பாடி மேட்டுகுளத் தெருவைச் சேர்ந்த சூர்யா(25), பாடி முனீஸ்வரர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணா(23), ஆவடி விகாஸ் நகரைச் சேர்ந்த கார்த்திக் (25) ஆகிய 4 பேர் இந்த கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் சுரேஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர் இளையராஜ பாண்டியனின் உறவினர் மகன் ஆவார்.

4பேர் கைது

உடனே போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து நாகர்கோவிலுக்கு அழைத்த வந்தனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார் மற்றும் 4 அரிவாள்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். கைது செய்யப்பட்ட சுரேஷ் போலீசாரிடம் கூறுகையில்,

சொத்து பிரச்சினை காரணமாக எங்களுக்கும், இளையராஜ பாண்டியனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நான் பலமுறை அவரிடம் நேரில் வந்து எங்களது சொத்தை கேட்டேன். ஆனால் அவர், என்னை அவமானப்படுத்தும் விதத்தில் பேசினார்.

இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதற்காக எனது நண்பர்களை சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தேன் 2 நாட்களாக சொத்தவிளை பகுதியில் முகாமிட்டு இருந்தோம். இளையராஜ பாண்டியனின் நடவடிக்கைகளை நோட்டமிட்டோம். சம்பவத்தன்று மொபட்டில் வந்தவரை தடுத்து நிறுத்தி வெட்டினோம். பொதுமக்கள் அங்க வரவே தப்பியோடிவிட்டோம். மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்