பெங்களூருவில் குழந்தையை கடத்திய வழக்கில் பாலியல் பெண் தொழிலாளி கைது பிடித்து கொடுத்த 3 வாலிபர்களுக்கு போலீஸ் பாராட்டு

பெங்களூருவில் குழந்தையை கடத்திய வழக்கில் பாலியல் பெண் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-03-31 20:19 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் குழந்தையை கடத்திய வழக்கில் பாலியல் பெண் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். பாலியல் பெண் தொழிலாளியை பிடித்து கொடுத்த 3 வாலிபர்களை போலீசார் பாராட்டிய சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

குழந்தை கடத்தல்

பெங்களூரு சிக்கபானவாரா ரெயில் நிலையத்தின் அருகே குடிசை அமைத்து வசித்து வருபவர் சித்தார்த். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், 1½ மாத ஆண் குழந்தையும் இருக்கின்றனர். சம்பவத்தன்று ஈஸ்வரியின் குழந்தை குடிசை முன்பு அமர்ந்து இருந்தது. அப்போது, அந்த குடிசைக்கு மர்மப்பெண் வந்து சாப்பிட உணவு வேண்டும் என்று ஈஸ்வரியிடம் கேட்டார். இதையடுத்து, அவர் உணவு எடுக்க குடிசையின் உள்ளே சென்றார்.

அந்த சமயத்தில், ஈஸ்வரியின் குழந்தையை மர்மப்பெண் தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதற்கிடையே, உணவு எடுத்து கொண்டு குடிசைக்கு வெளியே வந்த ஈஸ்வரி, தனது குழந்தையை மர்மப்பெண் கடத்தி சென்றிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அவர் தனது கணவருடன் சேர்ந்து குழந்தையையும், மர்மப்பெண்ணையும் அந்த பகுதியில் தீவிரமாக தேடினார்கள். ஆனால், எங்கு தேடியும் குழந்தையும், மர்மப்பெண்ணும் கிடைக்கவில்லை.

குழந்தையை மீட்ட வாலிபர்கள்

இந்த நிலையில், எசருகட்டா மெயின் ரோட்டில் உள்ள சீடிடாஹள்ளி சர்க்கிளில் ஒரு பெண், பச்சிளம் குழந்தையை பந்து போல் மேலே போட்டு பிடித்து கொண்டிருப்பதை அந்த வழியாக சென்ற தனியார் நிறுவன ஊழியரான வினோத் என்பவர் தனது நண்பர்களான ரவி குமார், ரித்தீஷ் நாயக் ஆகியோருடன் சேர்ந்து பார்த்தார். அவர்களுக்கு அந்த பெண்ணின் நடத்தையில் சந்தேகம் எழுந்தது.

இதனால், அவர்கள் 3 பேரும் அருகே சென்று அந்த பெண்ணிடம் குழந்தை பற்றி விசாரித்தனர். அப்போது, அந்த பெண் கூறிய பதில்கள் அவர்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அத்துடன் அந்த பெண் மதுபானம் அருந்தி குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, வினோத் உள்பட 3 வாலிபர்களும் குழந்தையை மீட்டனர். பின்னர் அந்த பெண்ணை பிடித்து பாகலகுண்டே போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர்.

பாலியல் தொழிலாளி கைது

விசாரணையில், அவருடைய பெயர் நளினி (வயது 35) என்பதும், பாலியல் தொழிலாளியான அவர் சித்தார்த்–ஈஸ்வரி தம்பதியின் குழந்தையை கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், பாலியல் தொழிலில் ஈடுபட்டு பலமுறை அவர் போலீசாரிடம் சிக்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை கடத்தியதாக நளினியை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து பாகலகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நளினியிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன், குழந்தையை மீட்டு போலீசில் ஒப்படைத்த வினோத் உள்பட 3 வாலிபர்களையும் போலீசார் பாராட்டினர். இவர்களுக்கு குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்