நெகமம் பகுதியில் வறட்சி: பயிர்களை காப்பாற்ற சொட்டுநீர் பாசனத்துக்கு மாறும் விவசாயிகள்
நெகமம் பகுதியில் வறட்சியில் இருந்து பயிர்களை காப்பாற்ற சொட்டுநீர் பாசனத்துக்கு விவசாயிகள் மாறி வருகின்றன.
நெகமம்,
நெகமம் பகுதியில் போதிய மழை பெய்யாததால் குளம், குட்டைகள் வறண்டு விட்டன. வறட்சியினால் செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன. மேலும் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நிலத்தடி நீர் மட்டத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதுடன், கிணற்று நீர் வேகமாக வற்றத்தொடங்கி விட்டன.
இதனால் இருக்கிற தண்ணீரை கொண்டு சிக்கனமாக பயிர் சாகுபடி செய்யும் முறைக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். தென்னந்தோப்புகளில் அதிகமாக இருந்த சொட்டு நீர் பாசன முறையை மற்ற பயிர் சாகுபடிக்கும் பயன்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நெகமம் பகுதியில் வறட்சியில் இருந்த பயிர்களை காப்பாற்ற சொட்டுநீர் பாசனத்துக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்.
கிணற்று நீர்இது குறித்து சொட்டுநீர் பாசனத்துக்கு மாறிய விவசாயிகள் கூறியதாவது:–
நெகமம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை அதிகளவு பெய்யும். கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் தற்போது வறட்சி ஏற்பட்டு, குளம், குட்டைகளில் தண்ணீர் இல்லை. இதனால் வாழை, சோளப்பயிர் சாகுபடி செய்ய சொட்டு நீர் பாசனத்தை விவசாயிகள் தேர்வு செய்து, அதற்கு மாறி வருகின்றனர்.
ஒரு சில இடங்களில் கிணறுகளில் ஓரளவு தண்ணீர் உள்ளது. எனவே கிணற்று நீர் மூலம் சொட்டு நீர் பாசனத்தில் வாழை, சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் குறைவான தண்ணீரை கொண்டு அதிக பயிர்க்கு தண்ணீர் வழங்க முடியும். திரவ வடிவலான உரம், சொட்டு பாசனம் வழியாக செலுத்தப்படுவதால், உரம் வீணாகாமல் நேரடியாக பயிர்களுக்கு செல்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.