கோவையில் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பெண் போலீசிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, பெண் போலீசிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை,
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை உள்ளது. 24 மணிநேரமும் செயல்படும் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் ஒருவர் போன் செய்து, பெண் போலீசாரிடம் ஆபாசமாக பேசி தொந்தரவு செய்து வந்தார். போலீசார் பலமுறை எச்சரித்தும் அந்த நபர் கேட்கவில்லை.
தொடர்ந்து 20 முறை இவ்வாறு பேசிவந்தார். அந்த நபரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து கண்காணித்ததில் செல்வபுரம் பகுதியில் இருந்து பேசுவது தெரியவந்தது.
வாலிபர் கைதுஇதையடுத்து செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையில் போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியில் உள்ள வீட்டில் இருந்த சுப்பிரமணி (வயது 28) என்பவரை கைது செய்தனர். இவர் நகை செய்யும் தொழிலாளி ஆவார். போலீசாரிடம் அவர் கூறும்போது, சினிமா படங்களில் வருவதுபோல், ஜாலிக்காக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பேசியதாக தெரிவித்தார். சுப்பிரமணி மீது அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்வது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து இடையூறு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.