தனிநபர் கழிவறை கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பிரதமருக்கு புகார் மனு அனுப்பும் போராட்டம்
கொத்தமங்கலம் ஊராட்சியில் தனிநபர் கழிவறை கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பிரதமருக்கு புகார் மனு அனுப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
கீரமங்கலம்,
பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்கு மத்திய அரசு நிதியும் வழங்கி உள்ளது. பயனாளிகளை ஊராட்சிகள் தேர்வு செய்து அந்த பயனாளிகளே தங்கள் வீடுகளில் மத்திய அரசு மானியத்தை பெற்று கழிவறைகள் கட்டி கொள்ள வேண்டும். இதற்காக ஒரு கழிவறை கட்ட சுமார் ரூ.12 ஆயிரம் வரை மத்திய அரசு நிதி வழங்கியது.
இதைப்போல புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் சுமார் 330 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் சுமார் 150 பயனாளிகளுக்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்மதத்துடன் ஒரு பெண் ஒப்பந்தக்காரர் கழிவறைகளை கட்டி கொடுக்க முன் வந்து கழிவறைகளை கட்டி உள்ளார்.
கழிவறைகள் கட்ட முழுமையாக மத்திய அரசு நிதி வழங்கி உள்ள நிலையில் பெண் ஒப்பந்தக்காரர் அரசு நிதி போதாது, இதில் இருந்து ஒன்றிய அதிகாரிகள், மற்றும் ஊராட்சியில் சிலருக்கும் பணம் கொடுக்க வேண்டும் எனக்கூறி ஒவ்வொரு வீட்டிலும் தலா ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை பணம் வசூல் செய்து உள்ளார்.
புகார் மனு அனுப்பும் போராட்டம்
முறையாக ஒப்பந்தம் விடாமல் ஒன்றிய அதிகாரிகளின் உதவியுடன் பெண் ஒப்பந்தக்காரர் பயனாளிகளிடம் அதிகமாக பணம் பெற்றதால் பா.ஜனதா பிரமுகர்கள் மற்றும் பயனாளிகள் திடீரென கொத்தமங்கலம் தபால் நிலையத்திற்கு நேற்று வந்து மத்திய அரசு நிதியில் தனிநபர் கழிவறை கட்டியதில் ஊழல் நடந்து உள்ளது. ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு அனுப்பும் போராட்டம் நடத்தினார்கள். முன்னதாக தபால் நிலையம் முன்பு ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.