புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே அரை நிர்வாணத்துடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டவர் கைது

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே அரைநிர்வாணத்துடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-03-31 23:15 GMT

புதுக்கோட்டை,

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தங்க சண்முக சுந்தரம். இவர் மக்கள் சேவை இயக்கத்தில் அகில இந்திய தலைவராக உள்ளார். இவர் டெல்லியில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே அரை நிர்வாணத்திடன் உடலில் சாட்டையால் அடித்துக்கொண்டும், கழிவு நீரை குடித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் அவர் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம், மீத்தேன், ஷேல்கேஸ் எடுக்கும் திட்டம் போன்ற திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும். ஏரி, குளங்களை முறையாக தூர்வாரி ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

கைது

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருக்கோகர்ணம் போலீசார் தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தங்க சண்முகசுந்தரத்தை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்