ஊட்டி–கூடலூர் சாலையில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 2 பெண்கள் பரிதாப சாவு
ஊட்டி–கூடலூர் சாலையில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஊட்டி,
கூடலூர் அருகே உள்ள ஏழுமரம் பனியர் இன ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் அம்புலி (வயது 54). இவருடைய மனைவி லட்சுமி (44). இவர்களது உறவினர்கள் வள்ளி என்கிற சித்ரா (37) மற்றும் ரமணி (35). இவர்கள் 4 பேரும் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஆட்டோவில் ஊட்டிக்கு சென்றனர். ஆட்டோவை கூடலூரை சேர்ந்த டிரைவர் கணேசன் (45) என்பவர் ஓட்டினார்.
ஆட்டோ ஊட்டி–கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா அருகே சென்று கொண்டிருந்த போது, ஊட்டியில் இருந்து கூடலூர் நோக்கி சென்ற லாரி ஒன்று எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது
2 பெண்கள் சாவுஇந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த வள்ளி, ரமணி ஆகிய பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அம்புலி, அவருடைய மனைவி லட்சுமி, டிரைவர் கணேசன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 பெண்கள் இறந்துள்ளதால் ஏழுமரம் கிராமம் சோகத்தில் மூழ்கி உள்ளது.