கடமலைக்குண்டு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கடமலைக்குண்டு அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-31 22:30 GMT

கடமலைக்குண்டு,

தேனி மாவட்டம் கடமலை–மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு, சங்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு உறை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரையே குடிநீராக ஊராட்சி நிர்வாகம் வினியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் சங்கம்பட்டி பகுதியில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குடிநீர் வழங்க எந்தவித நடவடிக்கையும் ஊராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டோ மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் பக்கத்து ஊர்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் சங்கம்பட்டி வழியாக கடமலைக்குண்டுவுக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயில் சிலர் இணைப்பு குழாய் பொருத்தி தண்ணீர் பிடித்தனர்.

சாலை மறியல்

இது குறித்து தகவலறிந்த ஒன்றிய ஆணையாளர் சுருளிவேல் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று இணைப்பு குழாய்களை அகற்ற முயன்றனர். அப்போது அப்பகுதி மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாலேயே இணைப்பு குழாய் பொருத்தியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சங்கம்பட்டி பகுதிக்கு விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து இணைப்பு குழாய்கள் அகற்றப்பட்டன. ஆனால் அதிகாரிகள் தெரிவித்தது போல் சங்கம்பட்டி பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் தேனி சாலைக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த கடமலைக்குண்டு போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் சமரசம்

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதற்கிடையே அங்கு வந்த ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சங்கம்பட்டி பகுதிக்கு நிரந்தரமாக குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர்.

அப்போது பேசிய பொதுமக்கள், அதிகாரிகள் கூறியபடி குடிநீர் வழங்கப்படாவிட்டால் அடுத்து வரும் நாட்களில் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்