நெல்லை– செங்கோட்டை ரெயில் பகவதிபுரம் வரை இயக்கம்: அடுத்த சில நாட்களில் ஆரியங்காவு வரை நீட்டிக்க வாய்ப்பு
நெல்லை– செங்கோட்டை பயணிகள் ரெயில் நேற்று பகவதிபுரம் வரை இயக்கப்பட்டது.
செங்கோட்டை,
நெல்லை– செங்கோட்டை பயணிகள் ரெயில் நேற்று பகவதிபுரம் வரை இயக்கப்பட்டது. மலைப்பகுதியில் இயக்குவதற்கான என்ஜின் கொண்டு வரப்பட்டதும், அடுத்த சில நாட்களில் ஆரியங்காவு வரை இந்த ரெயில் நீட்டிக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பகவதிபுரம் வரை இயக்கம்நெல்லை மாவட்டம் செங்கோட்டைக்கும், கேரள மாநிலம் புனலூருக்கும் இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகற்றிவிட்டு, புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டன. இந்த தடத்தில் செங்கோட்டை முதல் ‘நியூ‘ ஆரியங்காவு வரையும், எடமண் முதல் புனலூர் வரையும் ரெயில் சோதனை ஓட்டங்கள் முடிக்கப்பட்டு, ரெயில் போக்குவரத்து தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்தை தொடங்கும் முயற்சியாக நெல்லையில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் நேற்று பகவதிபுரம் ரெயில் நிலையம் வரை நீட்டித்து இயக்கப்பட்டது. முன்னதாக அந்த ரெயில் செங்கோட்டை ரெயில் நிலையம் வந்ததும், பூஜைகள் செய்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.
முதல் நாள் என்பதால் செங்கோட்டையில் இருந்து பகவதிபுரம் செல்ல பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.
பயணிகள் புகார்நெல்லை–செங்கோட்டை ரெயிலை பகவதிபுரம் வரை மட்டும் நீட்டித்து இயக்குவதால், தமிழக–கேரள பயணிகளுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று பயணிகள் புகார் தெரிவித்து இருந்தனர்.
குறைந்தபட்சம் ஆரியங்காவு வரையாவது இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.
ரெயில் என்ஜின்இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, “செங்கோட்டையை அடுத்த பகவதிபுரத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஆரம்பித்து விடுகிறது. மலைப்பகுதியில் ரெயிலை இயக்க வேண்டும் என்றால், அதிக திறன் கொண்ட என்ஜின் தேவைப்படுகிறது. அந்த என்ஜின் வருகைக்காக காத்திருக்கிறோம். இன்னும் ஒரு சில நாட்களில் மலைப்பகுதியில் இயக்குவதற்கான ரெயில் என்ஜின் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பின்பு ஆரியங்காவு வரை நீட்டித்து ரெயில் இயக்கப்படும்“ என்று கூறினர்.