எட்டயபுரம் அருகே நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் டிரைவர் பலி ஒருவர் படுகாயம்

எட்டயபுரம் அருகே நின்ற லாரி மீது இன்னொரு லாரி மோதியது. இதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2017-03-31 21:15 GMT

எட்டயபுரம்,

எட்டயபுரம் அருகே நின்ற லாரி மீது இன்னொரு லாரி மோதியது. இதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:–

தேங்காய் நார் லோடு ஏற்றிய லாரி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா பாளையம்பட்டு வெடியரசன் பாளையத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து மகன் தேவராஜன் (வயது 32), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவில் தன்னுடைய லாரியில் திண்டுக்கல்லில் இருந்து தேங்காய் நார் லோடு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தார்.

அந்த லாரியில் மாற்று டிரைவராக தர்மபுரி மாவட்டம் அரூர் தாமரைகோலியம்பட்டியைச் சேர்ந்த அன்பழகன் மகன் அருள் (26) என்பவர் இருந்தார். எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை வரையிலும் தேவராஜன் லாரியை ஓட்டி வந்தார். பின்னர் அங்குள்ள டீக்கடையில் தேவராஜன், அருள் ஆகிய 2 பேரும் டீ குடித்தனர். பின்னர் அருள் லாரியை ஓட்டி வந்தார். தேவராஜன் லாரியில் கிளீனர் இருக்கையில் தூங்கினார்.

நின்ற லாரி மீது மோதல்

நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் எட்டயபுரம் நாற்கர சாலை பைபாஸ் ரோடு சந்திப்பு பகுதியில் சென்றபோது அங்கு சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் அருள் ஓட்டி வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் அப்பளம் போன்று நொறுங்கியது.

கிளீனர் இருக்கையில் தூங்கி கொண்டிருந்த தேவராஜன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அருள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். தகவல் அறிந்ததும், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா, சப்– இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பார்சல் நிறுவன லாரி

படுகாயம் அடைந்த அருளை சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இறந்த தேவராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணையில் நின்ற லாரியானது மதுரையில் இருந்து பலசரக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடியை நோக்கி வந்து கொண்டிருந்ததும், அந்த லாரியானது தனியார் பார்சல் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்தது. அந்த லாரியை ஓட்டி வந்த மதுரை லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ரவி (57) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இறந்த தேவராஜனுக்கு ராஜேசுவரி என்ற மனைவியும், 3 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

மேலும் செய்திகள்