குடிமராமத்து திட்டத்தில் ரூ.5 கோடியே 85 லட்சம் செலவில் கண்மாய், குளங்கள் சீரமைப்பு பணி கலெக்டர் வீரராகவராவ் பார்வையிட்டு ஆய்வு

குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.5 கோடியே 85 லட்சம் செலவில் கண்மாய், குளங்கள் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

Update: 2017-03-31 22:45 GMT

மதுரை

மதுரைமாவட்டத்தில் நீர்வள ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மேலூர் வட்டம் தும்பைப்பட்டி உப்பிலாக்குடி கண்மாய் சீரமைக்கப்படுகிறது. அங்கு நடைபெறும் பணிகளை கலெக்டர் வீரராகவராவ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நீர்நிலைகளை சீரமைக்க பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீர்வரத்து கால்வாய்கள், ஏரி, குளம், கண்மாய்கள் பிற நீர்நிலைகள் சீரமைக்கப்படும். கலுங்குகள், மதகுகள் மறுகட்டுமானம் செய்யப்படும். தண்ணீர்செல்லும் வழிகளில் அடைத்திருக்கும் செடிகள் அகற்றப்படும். ரூ.10 லட்சத்திற்கு குறைவான மதிப்பீட்டு பணிகள் விவசாய சங்கங்கள், பாசனசபை, ஆயக்கட்டுதாரர் தொகுப்பின் நேரடிநியமனம் மூலம் செயல்படுத்தப்படும். அதற்கான பணிகள் பொதுப்பணித்துறையினரால் திட்டம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களால் நடைபெறும்.

72பணிகள்

ரூ.10 லட்சத்திற்கும் மேற்பட்ட பணிகள் நீர்வளஆதாரதுறையில் நடைமுறையில் உள்ள ஒப்பந்தப்புள்ளி விதிமுறையின்படி நடத்தப்படும். குடி மராமத்து திட்டத்திற்குமாநில அளவில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெரியாறு வைகை பாசனபகுதியில் 11, குண்டாறுபாசனபகுதியில் 13, பெரியாறு பிரதான கால்வாய் பகுதியில் 48 என மாவட்டத்தில் 72 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்காக 5 கோடியே 85 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர்வீரராகவராவ்கூறினார்.

ஆய்வின்போது செயற்பொறியாளர் பிரபு,உதவி என்ஜினீயர் தாஸ்யூஸ், செய்திமக்கள்தொடர்பு அதிகாரி செந்தில்அண்ணா மற்றும் அதிகாரிகள் உடன்சென்றனர்.

மேலும் செய்திகள்