மதுரை மாநகராட்சியில் ரூ.1.89 கோடி உபரி பட்ஜெட் சந்தோஷ சாலை திட்டம் அறிமுகம்
மதுரை மாநகராட்சியில் ரூ.1.89 கோடி உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை மாநகராட்சி பட்ஜெட் ஆண்டுத்தோறும் மேயரால், மாமன்ற கூட்டத்தில் வெளியிடப்படும். தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிகள் காலியாக இருப்பதால், மாநகராட்சி ஆணையாளர் கமிஷனர் சந்தீப் சந்தீப் நந்தூரி நேற்று பட்ஜெட் வெளியிட்டார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
மதுரை மாநகராட்சியின் 2017–2018ம் ஆண்டின் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உபரி பட்ஜெட்டாக உள்ளது. அதன்படி இந்த நிதியாண்டின் மொத்த மொத்த வருவாய் ரூ.2 ஆயிரத்து 543 கோடியேஎ 76 லட்சம் ஆகும். மொத்த செலவு ரூ. 2 ஆயிரத்து 541 கோடியே 81 லட்சம் ஆகும். உபரி தொகை ரூ.1 கோடியே 89 லட்சம் ஆகும்.
ஸ்மார்ட் சிட்டிஇந்த நிதியாண்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.320 கோடி செலவில் வைகை 3–ம் கட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தினமும் 50 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்திகரிப்பு செய்வதற்கான மையம் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே 5 மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் 12 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.
சந்தோஷ சாலை...அரசு இடங்களில் உள்ள கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. தனியார் இடங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வருவாய் துறையினருடன் இணைந்து நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர தனியார் இடங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றி விட்டு, அதற்குரிய அபராத தொகையை காலி மனை வரியுடன் சேர்ந்து வசூலிக்கப்படும். அடுத்தகட்டமாக வருவாய் சட்டப்படி, அந்த இடத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
மதுரை மாநகராட்சியில் சந்தோஷ சாலை திட்டம் நாளை 2–ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம், ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின்படி மாநகரில் உள்ள ஒரு தெரு தேர்ந்தெடுக்கப்படும். அந்த சாலையில் காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்படும். அந்த சாலையில் நாட்டியம், நாடகம், யோகா, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படும். அதே சமயத்தில் மாநகராட்சியின் பணிகள், அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நாளை முதல் முறையாக அண்ணாநகரில் இந்த சந்தோஷ சாலை திட்டம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது துணை கமிஷனர் சாந்தி, நகர் பொறியாளர் மதுரம், உதவி கமிஷனர் (கணக்கு) கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.