இந்த மாதத்துக்குள், மாவட்டம் முழுவதும் 70 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும் ஐகோர்ட்டு வக்கீல் ஆணையர்கள் தகவல்

இந்த மாதத்துக்குள் மாவட்டம் முழுவதும் 70 சதவீத சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும் என்று ஐகோர்ட்டு வக்கீல் ஆணையர்கள் தெரிவித்தனர்.

Update: 2017-03-31 22:30 GMT

சிவகங்கை,

தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் இந்த பணிகளை கண்காணிக்க மாவட்டம் தோறும் வக்கீல் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டது குறித்து வக்கீல் ஆணையர்கள் காமேஸ்வரன், லூயிஸ் ஆகியோர் சிவகங்கையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதை வாரம் தோறும் ஐகோர்ட்டு நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். மற்ற மாவட்டங்களை பொறுத்தவரை ஊருக்கு வெளியே தான் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன.

ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் இருக்கும் பகுதியில் தான் ஊர் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 461 கண்மாய்கள் உள்ளன. நீர் ஆதாரத்தை பாதுகாக்க முதற்கட்டமாக கண்மாய்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதற்கு 6½ கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

பாராட்டு

சிவகங்கை மாவட்டத்தில் தான் கருவேல மரங்கள் அதிகபட்சமாக 6½ கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட கலெக்டருக்கு, நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 3 சதவீதம் தான் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டிருந்தன.

தற்போது 35 சதவீத கருவேல மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அனைத்து தரப்பினரும் இணைந்து கருவேல மரங்களை அகற்றும் பணியை செய்து வருகின்றனர். இதனால் இந்த மாதத்துக்குள் 70 சதவீதம் வரை கருவேல மரங்கள் வெட்டப்படும் வாய்ப்பு உள்ளது.

தனியார் இடங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நோட்டீசு அனுப்பியும் அவை அகற்றப்படாமல் இருந்தால் அதுபோன்றவர்கள் குறித்த விவரத்தை தெரிவிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதுபோன்றவர்களை வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தவறான பிரசாரம்

தாசில்தார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளை கொண்ட குழு மூலமே நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற ஏலம் விடப்பட்டுள்ளது.

இதன்மூலம் கிடைத்த வருமானம அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏலம் விடப்பட்ட விவகாரத்தில் தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. இது ஏற்புடையது அல்ல.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின் போது சிவகங்கை தாசில்தார் நாகநாதன், மண்டல துணை தாசில்தார் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்