போலி வாரிசு சான்றிதழ் கொடுத்து வங்கியில் ரூ.8 லட்சம் அபகரிக்க முயற்சி வாலிபர் கைது
காஞ்சீபுரம் அருகே போலி வாரிசு சான்றிதழ் கொடுத்து வங்கியில் ரூ.8 லட்சத்தை அபகரிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த சுங்குவார்சத்திரம் திருமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் ரங்கம்மா (வயது 50). இவர் இறந்துவிட்டார். இறப்பதற்கு முன்பு சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.8 லட்சத்தை தனது பெயரில் டெபாசிட் செய்துள்ளார். ரங்கம்மாவிற்கு வாரிசு கிடையாது. இதனால் வங்கியில் டெபாசிட் செய்த பணத்திற்கு வாரிசு யார் என குறிப்பிடவில்லை. அதே பகுதியை சேர்ந்தவர் பாரதி (36), ரங்கம்மாவினுடைய தங்கை மகன் என கூறப்படுகிறது.
ரங்கம்மா ரூ.8 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்து உள்ளதை தெரிந்துகொண்டு காஞ்சீபுரம் தாசில்தார் கொடுத்ததைபோல போலியான வாரிசு சான்றிதழ் தயார் செய்ததாக தெரிகிறது. பின்னர் அந்த சான்றிதழை வங்கியில் கொடுத்து நான்தான் ரங்கம்மாவின் வாரிசு என்றும், என்னிடம் தான் எனது பெரியம்மாவின் டெபாசிட் பணம் ரூ.8 லட்சத்தை கொடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
வாலிபர் கைதுஇதனால் சந்தேகம் அடைந்த வங்கி அதிகாரிகள் காஞ்சீபுரம் தாசில்தார் கியூரிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வங்கிக்கு வந்த தாசில்தார் கியூரி, பாரதியிடம் இருந்த சான்றிதழை வாங்கி பரிசோதித்தார். அப்போது அது போலி சான்றிதழ் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தாசில்தார் கியூரி பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.8 லட்சத்தை அபகரிக்க முயன்ற பாரதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.