நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து உதைத்ததால் ராணுவ வீரரை உயிருடன் எரித்து கொல்ல முயற்சி மனைவிக்கு வலைவீச்சு
பெலகாவி டவுனில் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து உதைத்ததால், ராணுவ வீரரை உயிருடன் எரித்துக் கொல்ல முயன்ற மனைவியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
உப்பள்ளி,
பெலகாவி டவுன் மார்க்கெட் அருகே உள்ள டேகடியாக் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் பவார்(வயது 33). ராணுவ வீரர். இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த சவிதாவுக்கும்(27), கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் அந்தப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கான குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்த தம்பதிக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் தீபக் பவார் மற்றும் அவரது மனைவி சவிதாவிற்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
மேலும் அளவுக்கு அதிகமான மதுஅருந்தும் பழக்கத்திற்கு அடிமையான தீபக் பவார் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, சவிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து, உதைத்து வந்ததாக தெரிகிறது.
எரித்துக் கொல்ல முயற்சிஇந்த நிலையில் நேற்று முன்தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த தீபக் பவார், சவிதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து அவரை அடித்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து தீபக் பவார் தனது அறைக்கு தூங்குவதற்காக சென்று விட்டார். தீபக் பவார் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து, உதைத்ததால் அவர் மீது சவிதாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது. மேலும் அவர் உயிருடன் இருந்தால் நிம்மதியாக இருக்க முடியாது என்று எண்ணிய சவிதா, தீபக் பவாரை கொலை செய்ய முடிவு செய்தார்.
இந்த நிலையில் நள்ளிரவில் தீபக் பவார் தனது அறையில் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற சவிதா அவர் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார். இதில் அவர் உடல் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் தீபக் பவார் அலறி துடித்தார். இதனையடுத்து சவிதா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
வலைவீச்சுதீபக் பவாரின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பெலகாவி கே.எல்.இ. அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அறிந்த பெலகாவி மார்க்கெட் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து உதைத்ததால் தீபக் பவாரை, சவிதா உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து பெலகாவி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சவிதாவை வலைவீசி தேடிவருகிறார்கள்.
பரபரப்புநடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து, உதைத்ததால் கணவனை மனைவியே உயிருடன் எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.