தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு

தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், விவசாயி கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2017-03-21 19:30 GMT

நெல்லை,

தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், விவசாயி கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

வெட்டிக்கொலை

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள கரிசல்பட்டி ஓடைக்கரையை சேர்ந்தவர் ஜான்(வயது 57). தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரூபன்ராஜா(40). விவசாயி. இவர்கள் இருவருக்கும் இடையே பொது குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக ஜான், ரூபன்ராஜா ஆகிய இருவரும் அடிக்கடி மோதிக்கொண்டனர்.

கடந்த 9–11–2015 அன்று ஓடைக்கரை பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயம் அருகே ரூபன் ராஜா நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஜான் வந்தார். அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜான் அரிவாளால் ரூபன்ராஜாவை சரமாரியாக வெட்டினார். இதில் ரூபன்ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ஆயுள் தண்டனை

இது குறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானை கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை நெல்லை முதலாவது செசன்சு கோர்ட்டில் நீதிபதி ராஜசேகர் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நீதிபதி ராஜசேகர், ஜானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் சிவலிங்க முத்து ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்