கோவில்பட்டி அருகே திருமணமான 10 நாளில் பெண் போலீஸ் மாயம் போலீசார் விசாரணை

கோவில்பட்டி அருகே திருமணமான 10 நாட்களில் பெண் போலீஸ் மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Update: 2017-03-21 20:30 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே திருமணமான 10 நாட்களில் பெண் போலீஸ் மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பெண் போலீஸ்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர்குளத்தைச் சேர்ந்த மூக்கையா மகள் காளீசுவரி (வயது 26). இவர் 10–ம் வகுப்பு முடித்து விட்டு கடந்த 2011–ம் ஆண்டு போலீசில் பணியில் சேர்ந்தார். தற்போது சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், மதுரை மாவட்டம் குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 9–ந் தேதி திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடந்தது. சிவராமகிருஷ்ணன், மதுரையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்பள்ளிக்கூடத்தில் முதல்வராக பணிபுரிந்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு காளீசுவரி தன்னுடைய கணவருடன் மதுரையில் வசித்து வந்தார்.

உடல்நலக்குறைவு

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுமண தம்பதியினர் ஜமீன் தேவர்குளத்துக்கு வந்தனர். இதற்கிடையே சிவராமகிருஷ்ணனின் தாயாருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சிவராமகிருஷ்ணன், காளீசுவரியை அவரது பெற்றோரின் வீட்டில் விட்டு விட்டு, அவர் மட்டும் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

கடந்த 19–ந் தேதி காலையில் காளீசுவரி, தன்னுடைய கணவரிடம் செல்போனில் பேசினார். அப்போது அவர் சிவராமகிருஷ்ணனின் தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக தெரிகிறது.

மாயமானார்

அதன்பிறகு சிறிது நேரத்தில் காளீசுவரி வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மாலை வரை காளீசுவரியை காணாதது கண்டு அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே காளீசுவரின் கணவரிடம் விசாரித்தனர். அவர் மதுரைக்கும் செல்லவில்லை. இதனால் காளீசுவரி என்ன ஆனார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. அவருடைய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் விசாரித்தனர். ஆனால் காளீசுவரி பற்றி எந்தவித தகவலும் இல்லை.

உடனே காளீசுவரி மாயமானது குறித்து மூக்கையா நாலாட்டின்புத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி வழக்குப்பதிவு செய்தார்.

போலீசார் விசாரணை

காளீசுவரி மாயமானது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 10 நாளில் பெண் போலீஸ் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்