தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் கலெக்டர் ரவிகுமார் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஓய்வூதியர்கள்தூத்துக்குடி மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும். நேரில் வர இயலாதவர்கள் வாழ்வுச்சான்று பெற்று கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த ஆண்டு ஓய்வூதியர்கள் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வேலை நாட்களில் நேர்காணலுக்கு ஆஜராக வேண்டும்.
ஆவணங்கள்கருவூலத்துக்கு நேரில் வருபவர்கள், இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால், அவற்றின் நகல்களுடன் தங்களில் ஓய்வூதிய கொடுவை ஆணை எண்ணையும் (பி.பி.ஓ. எண்) சேர்த்து அதில் குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஓய்வூதியர்கள் கருவூலத்துக்கு செல்லும் போது ஓய்வூதிய புத்தகம் மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
வாழ்வு சான்றுநேரில் வர முடியாத ஓய்வூதியர்கள் ஓய்வூதிய புத்தகம், நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், ரேசன் கார்டு போன்ற ஆவணங்களின் நகல்களுடன் வாழ்வுச் சான்றை சேர்த்து சம்பந்தப்பட்ட கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். வாழ்வு சான்று படிவத்தை www.tn.gov.in/karuvoolam/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த படிவத்தை, ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கி கிளை மேலாளர் அல்லது அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் அல்லது தாசில்தார், துணை தாசில்தார் அல்லது வருவாய் ஆய்வாளர் போன்றவர்களிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.
வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு, நோட்டரி, வங்கி மேலாளர் அல்லது இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச்சான்று பெற்று, சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
மின்னணு வாழ்வு சான்றுஓய்வூதியர்கள் தங்களது ஆதார் எண்ணை கருவூலத்தில் பதிவு செய்து, இணையதள வழி சேவையை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது www.jeevanpramaan.gov.in என்ற இணையதளம் வழியாக ஓய்வூதியரின் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு, ஓய்வூதியர் தங்களது வாழ்வுச் சான்றினை இணையதளம் மூலமாகவே பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முகவரிஓய்வூதியர்கள் தற்போதைய இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரத்தவறினாலோ அல்லது வாழ்வு சான்றினை அனுப்ப தவறினாலோ ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் வருகிற ஆகஸ்டு மாதம் முதல் நிறுத்தப்படும். இதுவரை ஓய்வூதியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம்.
பொதுத்துறை வங்கிகளின் மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தமிழ்நாடு மின்வாரியம், ரெயில்வே, அஞ்சல்துறை, தொழிலாளர் வைப்பு நிதித்திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.
இவ்வாறு அதில், கலெக்டர் ரவிகுமார் கூறி உள்ளார்.