சிறுமலையில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த புள்ளிமான்

சிறுமலையில் இருந்து தண்ணீர் தேடி வெள்ளோடு ஊருக்குள் புகுந்த புள்ளிமானை பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Update: 2017-03-20 22:45 GMT

சின்னாளபட்டி

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் சிறுத்தை, காட்டெருமை, முயல், குரங்கு, கடமான், புள்ளிமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் இருந்தன. ஆனால் சிறுமலை பகுதியில் தொடர்ந்து காடுகள் அழிக்கப்பட்டதாலும், மழை அளவு குறைந்ததாலும் கோடை காலங்களில் மரம், செடி, கொடிகள் மற்றும் காய்ந்து போன புல்வெளியில் சமூக விரோதிகள் தீ வைப்பதாலும் பல இடங்கள் பாலைவனம் போல் காட்சி அளிக்கின்றன.

மேலும், விலங்குகள் தண்ணீர் குடிக்கும் நீர்நிலைகளும் வற்றி விட்டன. இதனால் இங்கிருந்த பல்வேறு அரிய விலங்குகள் இடம் பெயர்ந்து விட்ட நிலையில் தற்போது முயல், கடமான், குரங்கு, காட்டெருமை, புள்ளிமான்கள் மட்டுமே சிறுமலைப் பகுதியில் காணப்படுகிறது.

ஊருக்குள் புகுந்த புள்ளிமான்

இந்நிலையில் சிறுமலை பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாகவே போதிய மழை இல்லாததால் இங்குள்ள நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு விட்டன. இதனால் வன விலங்குகள் அடிவார பகுதிகளுக்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு கடந்த மாதம் சிறுமலை பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த கடமான் கொடைரோடு பகுதியில் இறந்து கிடந்தது. இதேபோன்று மற்றொரு கடமான் வெள்ளோடு அருகே திண்டுக்கல் மதுரை 4 வழி சாலையில் வாகனம் மோதி இறந்தது.

இதனிடையே நேற்று சிறுமலை பகுதியில் இருந்து ஒரு புள்ளிமான் தண்ணீரை தேடி மலையடிவார பகுதிக்கு வந்துள்ளது. பின்னர் பொதுமக்களை கண்டதும் மலைக்கு செல்லாமல் ஊருக்குள் புகுந்து ஓடியது. இதனை சிலர் மலை பகுதிக்கு விரட்டி உள்ளனர். ஆனால் வழி தெரியாமல் புள்ளிமான் வெள்ளோடு ஊருக்குள் புகுந்தது. பின்னர் ஒரு தெருவில் படுத்துக்கொண்டது.

முதலுதவி சிகிச்சை

பின்னர் பொதுமக்கள் புள்ளிமானை பிடித்து கால்களை கட்டிவைத்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து புள்ளிமானை கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து மீண்டும் சிறுமலை வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்