உல்லாஸ்நகரில் ‘வடபாவ்’ கடைக்காரர் உயிரோடு எரிப்பு

உல்லாஸ்நகரில் வடபாவ் கடைக்காரர் உயிரோடு எரிக்கப்பட்டார். கடைக்குள் புகுந்து வெறிச்செயலில் ஈடுபட்டவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2017-03-20 22:42 GMT

அம்பர்நாத்

உல்லாஸ்நகரில் வடபாவ் கடைக்காரர் உயிரோடு எரிக்கப்பட்டார். கடைக்குள் புகுந்து வெறிச்செயலில் ஈடுபட்டவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

வடபாவ் கடைக்காரர்

தானே உல்லாஸ்நகர் ரெயில் நிலையத்தின் எதிரே ‘வடபாவ்’ கடை நடத்தி வருபவர் சந்தர்லால் ராம்ராஜியாணி(வயது50). இவரது கடைக்கு எதிரில் நேற்று தள்ளுவண்டியில் அந்த பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சட்டவிரோதமாக ‘வடபாவ்’ வியாபாரம் செய்துகொண்டிருந்தார்.

இதை பார்த்ததும் சந்தர்லார் ராம்ராஜியாணி அவரிடம் சென்று இங்கு வடபாவ் வியாபாரம் செய்தால் மாநகராட்சியில் புகார் கொடுத்து விடுவதாக கூறினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது.

இந்த வாக்குவாதம் முற்றியதில் இருவரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதன்பின்னர் சந்தர்லால் ராம்ராஜியாணி தனது கடைக்கு வந்துவிட்டார்.

இந்த சம்பவத்தால் அவர் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்த சுரேஷ் தன்னிடம் பிளாஸ்டிக் கேனில் இருந்த மண்எண்ணெயை எடுத்துக்கொண்டு சந்தர்லால் ராம்ராஜியாணியின் கடைக்குள் ஆவேசமாக சென்றார்.

உயிரோடு எரிப்பு

பின்னர் அவர் சந்தர்லால் ராம்ராஜியாணியை அடித்து உதைத்து, அவர் மீது தான் கொண்டு வந்த மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில், உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில் சந்தர்லால் ராம்ராஜியாணி வேதனை தாங்க முடியாமல் அலறித்துடித்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உல்லாஸ்நகர் சென்டிரல் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு 90 சதவீதம் தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுரேசை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்