ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-03-20 23:00 GMT

ஈரோடு

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். முழுநேர ஊழியர்களாக நியமிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறையின் உள்ளாட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

உதவி இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு அடிப்படையில் நிரப்ப வேண்டும். இவர்களுக்கான பணியிட மாறுதல் வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும் உள்பட மொத்தம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் கடந்த 14–ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

காத்திருப்பு...

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் 678 ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களும் கடந்த 14–ந் தேதி முதல் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமும், போராட்டங்களும் நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், தங்களது 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் கே.மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் சிவசங்கர், பொருளாளர் ரவி, மாநில செயலாளர் பாஸ்கர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

கோ‌ஷங்கள்

போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சாமியான பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் தரைவிரிப்பும் போடப்பட்டு இருந்தது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரத்தொடங்கிய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாமியான பந்தலில் அமர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலையிலேயே போராட்டத்தில் கலந்து கொண்டதால் அவர்களுக்கு மதிய உணவு கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே சமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்