அவினாசி பகுதியில் குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
அவினாசி பகுதியில் குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவினாசி
அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி மங்கலம் ரோடு பெரியகருணைபாளையத்தில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–
வேலாயுதம்பாளையம் ஊராட்சி பெரியகருணைபாளையம், சின்ன கருணைபாளையம், காடேஸ்வராநகர், கருணாம்பிகை நகர், பாலாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு கடந்த 5 மாதமாக கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும், பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. எங்களை சாலை மறியலில் ஈடுபட வைத்தவர்களே அவர்கள் தான்.
அடிப்படை வசதிகள்மேலும், பெரியகருணைபாளையத்தில் இருந்து உமையக்செட்டிபாளையம் செல்லும் ரோடு 2002–ம் ஆண்டு போடப்பட்டது. அந்த ரோடு மிக மோசமான நிலையில் குண்டும்–குழியுமாக உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் பல நடந்துள்ளன. இதனை சீரமைக்க வேண்டும். எனவே அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் ரோட்டை சீரமைக்கும் வரை இந்த இடத்தை விட்டு போகமாட்டோம்’’ என கூறினர்.
இதுபோல் அவினாசியை அடுத்து காசிகவுண்டன்புதூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தாமரைக்குளம் அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் ‘‘ எங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அன்னபூரணி நகரில் 25 வீடுகளுக்கு ஒரு குடிநீர் குழாய் தான் உள்ளது. அதிலும் சரியாக தண்ணீர் வருவதில்லை. மாதம் ஒரு முறை தான் தண்ணீர் வினியோகம் செய்கின்றனர்.
போக்குவரத்து பாதிப்புஇந்த பகுதியில் பெயருக்குதான் சாக்கடை உள்ளது. சாக்கடை நீர் வெளியேறுவதில்லை. கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. மேலும், துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. குப்பைகளை எடுப்பதே இல்லை. இதற்காக கோரிக்கைகள் விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
எனவே குடிநீர் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டோம்’’ என்று கூறினர். இந்த சாலை மறியல் போராட்டங்கள் குறித்து தகவல் அறிந்ததும் அவினாசி தாசில்தார் அருணா, பெரியகருணைபாளையம் மற்றும் காசிகவுண்டன்புதூரில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஒரு வாரத்தில் குடிநீர் பிரச்சினை உள்பட அனைத்திற்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அவினாசி–மங்கலம் ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.