ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-03-20 23:00 GMT
திருப்பூர்,

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு அரசாணையின் படி சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஒன்றிய பொறியாளர், உதவி பொறியாளர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 14–ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

இதற்காக திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திரளானோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். முதலில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பிய போராட்டக்குழுவினர், பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் ஊர்வலமாக வந்து, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது, அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து, அனைவரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாகன நிறுத்தும் இடத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் மாலை வரை காத்திருப்பு பேராட்டம் நடத்தினார்கள். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்காக கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே சமையல் ஆட்களை வைத்து, மதிய உணவு தயாரித்து சாப்பிட்டனர்.

மேலும் செய்திகள்