கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க கோரிக்கை
வறட்சி நிவாரண தொகையாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி,
தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ம.தி.மு.க. விவசாய அணி சார்பில், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அழகர்சாமி தலைமை தாங்கினார்.
வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், வறட்சி நிவாரண தொகையை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும், கடந்த 2 ஆண்டுகளுக்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும், புதுடெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய–மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
கயத்தாறு யூனியன் முன்னாள் துணை தலைவர் ஜெயச்சந்திரன், ம.தி.மு.க. கிளை செயலாளர்கள் ராஜகுரு, குருசாமி, விவசாயிகள் சங்கம் ஆதிமூலம், நவநீதகிருஷ்ணன், செந்தில்குமார், ரங்கசாமி, ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தாலுகா அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
தாசில்தாரிடம் மனுபின்னர் அனைவரும் தாசில்தார் ராஜ்குமார் தங்கசீலனிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர். அதன்பின்பு கலைந்து சென்றனர்.
--–
புட்நோட்
கோவில்பட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தியதை படத்தில் காணலாம்.