சங்கரன்கோவிலில் ரெயில் தண்டவாளத்தில் துண்டு துண்டாக கிடந்த பெண் பிணம் போலீசார் விசாரணை

சங்கரன்கோவிலில் ரெயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் துண்டு துண்டாக பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-03-20 22:15 GMT

சங்கரன்கோவில்,

தண்டவாளத்தில் பெண் பிணம்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில், நேற்று காலை ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சிவப்பு நிற சேலை அணிந்திருந்த, 60 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் தலை, கால்கள் துண்டான நிலையில் கிடந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரெயில்வே ஊழியர்கள் இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை

அதன் பேரில் ரெயிவே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். துண்டு துண்டாக கிடந்த பெண்ணின் உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்று ரெயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்