நெல்லையில், தாமிரபரணி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்தது

குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில், தாமிரபரணி ஆற்றில் இறங்கி விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-03-20 22:30 GMT

நெல்லை,

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் சிப்பாட் வளாகத்தில் உள்ள பன்னாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதிக்க கூடாது. அந்த நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்களும் பங்கேற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் உள்ள தாமிபரணி ஆற்றில் இறங்கி நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.

ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்

அப்போது அவர் கூறும்போது, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆறு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டதால், விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் பன்னாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படுகிறது. அந்த ஆலைகளுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும். அந்த ஆலை நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்ததை ரத்து செய்ய வேண்டும்“ என்றார்.

இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் வேலுமயில், தலைவர் முத்துப்பாண்டியன், பொருளாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்