கீழையூர் அருகே ஆடு திருடிய சிறுவன் உள்பட 4 பேர் கைது

கீழையூர் அருகே ஆடு திருடிய சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2017-03-20 21:08 GMT
வேளாங்கண்ணி,


நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கீழப்பிடாகை கீழத்தெருவை சேர்ந்தவர் வீரசேகர் (வயது34). விவசாயி. சம்பவத்தன்று வீரசேகர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 2 மணியவில் தனது வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் சத்தம்போட்டுள்ளது. இதனால் திடுக்கிட்டு எழுந்த வீரசேகர், கொட்டகையில் வந்து பார்த்தபோது அங்கு மர்ம நபர் ஒருவர் ஆட்டை திருடியுள்ளார். உடனே வீரசேகர் திருடன், திருடன் என சத்தம்போட்டுள்ளார். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து திருடனை பிடித்து கீழையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார், நடத்திய விசாரணையில் அந்த நபர் திருவாரூர் மாவட்டம் இடும்பவனம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த அப்பாதுரை மகன் ராம்குமார் (19) என்பதும், அவருடன் மேலும் 4 பேர் தப்பி செல்வதற்கு வசதியாக மோட்டார் சைக்கிள் களுடன் காத்திருப்பதும் தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து போலீசார் ராம்குமார் சொன்ன தகவலின் பேரில் மோட்டார் சைக்கிள்களுடன் காத்திருந்த மற்ற 4 பேரையும் பிடிப்பதற்காக சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது போலீசார் மற்றும் பொதுமக்களை கண்டவுடன் மோட்டார் சைக்கிள்களில் காத்திருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே போலீசார் அவர்களை விரட்டி சென்று 3 பேரை பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். பின்னர் விசாரணையில் அந்த நபர்கள் திருப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த ஹாஜா அலாவுதீன் மகன் நியாஸ் அகமது (25), திருவாரூர் மாவட்டம் இடும்பவனம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த அரங்கநாதன் மகன் அரவிந்த் (19), அதே பகுதியை சேர்ந்த 17 சிறுவன் என்பதும், இவர்கள் கூட்டாக ஆடு திருட வந்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கீழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராம்குமார், நியாஸ்அகமது, அரவிந்த், 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் ஆடு திருடுவதற்காக பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய திருப்பூண்டியை சேர்ந்த ஜபருல்லா மகன் முகமது இம்ரானை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்