அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் மண்சட்டி ஏந்தி போராட்டம்

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் மண்சட்டி ஏந்தி போராட்டம்

Update: 2017-03-20 22:45 GMT
திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டம் நேற்று 7-வது நாளாக நடந்தது. போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு தவணை முறையில் பென்சன் வழங்குவதை கைவிடவேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், போக்குவரத்து கழக பென்சனை அரசே ஏற்று வழங்கவேண்டும், நிறுத்தப்பட்ட ஓய்வு கால சேமநல நிதியை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் சிலர் மண்சட்டியை கையில் ஏந்தி பிச்சை எடுப்பது போல் செய்து காட்டினார்கள். நேற்று மாலையில் திடீரென கஞ்சி காய்ச்ச முயன்றனர். அப்போது போலீசார் அனுமதி மறுத்ததால் ஓய்வூதியர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன்பின் மண்டல அலுவலக வளாகத்தில் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தினர். இரவிலும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. இதுகுறித்து ஓய்வூதியர் நல அமைப்பின் தலைவர் சின்னசாமி கூறுகையில், பிப்ரவரி மாத ஓய்வூதிய தொகை எங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் வரை போராட்டம் தொடரும் என்றார். 

மேலும் செய்திகள்