கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
மதுரை அருகே உள்ள கோவில்பாப்பாக்குடியை சேர்ந்தவர் சோனைமுத்து.
மதுரை,
மதுரை அருகே உள்ள கோவில்பாப்பாக்குடியை சேர்ந்தவர் சோனைமுத்து. இவரது மனைவி மகாலெட்சுமி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இதற்காக அவர் வீட்டு பத்திரம் மற்றும் சில ஆவணங்களை கொடுத்துள்ளார். மேலும் வட்டியும், அசலும் செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் கடன் கொடுத்த நபர் அசலை விட கூடுதலாக வட்டியை வசூலித்துள்ளார். மேலும் சோனைமுத்து வீட்டின் ஆவணங்களை தனது பெயருக்கு மாற்றி அவர்களை வெளியேற்றி உள்ளார். இதுகுறித்து கணவன்–மனைவி இருவரும் போலீசில் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை கண்டித்தும், வீட்டு பத்திரத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கக்கோரியும் மனு கொடுக்க சோனைமுத்து மற்றும் மகாலெட்சுமி ஆகியோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகாலெட்சுமி மனு கொடுக்க நின்றிருந்தார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்