விருத்தாசலத்தில் சாலை அமைப்பதற்காக துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்பை சரிசெய்யக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்

விருத்தாசலத்தில் சாலை அமைப்பதற்காக துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்பை சரிசெய்யக்கோரி பொதுமக்கள் மறியல்

Update: 2017-03-20 22:45 GMT

விருத்தாசலம்,

குடிநீர் இணைப்பு துண்டிப்பு

விருத்தாசலம் 15–வது வார்டில் உள்ள மக்புல் காலனியில் சுமார் 50–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது கடலூர்–விருத்தாசலம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக சாலையோரத்தில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் இருந்து, மக்புல் காலனிக்கு குடிநீர் செல்லக்கூடிய குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மக்புல் காலனி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலையில் கடலூர்–விருத்தாசலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், குடிநீர் இணைப்பை சரிசெய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோ‌ஷம் எழுப்பினர்.

மற்றொரு தரப்பினர் நிறுத்தினர்

இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து, குடிநீர் இணைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதையடுத்து குடிநீர் இணைப்பை சரிசெய்ய நகராட்சி ஊழியர்கள் அங்கு வந்தனர். அப்போது அருகில் உள்ள கஸ்பா காலனியில் இருந்து குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கான பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு திரண்டு வந்த கஸ்பா காலனி மக்கள், எங்கள் பகுதியில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே இங்கிருந்து இணைப்பு கொடுக்கக்கூடாது என்று கூறி பணியை தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து நகராட்சி ஊழியர்கள், குடிநீர் இணைப்பு கொடுக்காமல் அங்கிருந்து சென்றனர்.

பரபரப்பு

அப்போது, எங்கள் பகுதிக்கு விரைந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மக்புல் காலனி கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்