150 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்கக்கோரி திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

திருப்பத்தூர் ஒன்றியம் பிராமணம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது குண்டேந்தல்பட்டி

Update: 2017-03-20 22:45 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் ஒன்றியம் பிராமணம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது குண்டேந்தல்பட்டி, மேலையான்பட்டி, பிராமணப்பட்டி கிராமங்கள். இந்த கிராமங்களில் நடைபெற்று வரும் 150 நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் கிராம மக்களுக்கு கடந்த ஓராண்டாக வேலை செய்ததற்கான சம்பளம், இதுவரை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதுகுறித்து இப்பகுதி கிராமமக்கள் ஏற்கனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லையாம்.

இதனால் அந்த கிராமங்களை சேர்ந்த 150 நாள் திட்ட பணியாளர்கள் 100–க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனே வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன், ஹேமலதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், சம்பளம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்