தொழில் அதிபரிடம் நூதனமுறையில் ரூ.4 லட்சம் மோசடி வெளிநாட்டு பெண் கைது; முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு

தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.4 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-03-19 22:23 GMT

மும்பை,

தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.4 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார். தப்பிய முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

வெளிநாட்டுக்காரர் அழைப்பு

மும்பை, கார் பகுதியில் தொழில் அதிபர் ஒருவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவருக்கு சமீபத்தில் வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், ஆப்பிரிக்காவின் கேமருன் நாட்டை சேர்ந்த ஒருவர் மும்பையில் பலகோடி ரூபாய் முதலீடு செய்து இரும்பு தொழில் செய்ய விரும்புவதாக கூறினார்.

இதையடுத்து மும்பை தொழில் அதிபர், கேமருன் நாட்டை சேர்ந்தவரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தான், கேமருனில் மந்திரியாக இருப்பதாகவும், விரைவில் மும்பைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

ரூ.4 லட்சம்

இந்தநிலையில் சம்பவத்தன்று தொழில் அதிபரிடம் பேசியவர் மும்பை வந்தார். அப்போது அவர் தன்னிடம் அதிகளவு அமெரிக்க டாலர் இருப்பதாகவும், அதற்கு மாற்றாக இந்திய பணம் தரும்படி தொழில் அதிபரிடம் கூறினார். இதையடுத்து தொழில் அதிபர் ரூ.4 லட்சத்தை வெளிநாட்டுக்காரர் தங்கியிருந்த ஓட்டலுக்கு தனது உதவியாளர்களிடம் கொடுத்து அனுப்பினார். ஓட்டல் வரவேற்பறையில் வெளிநாட்டுக்காரர், மரியாமோ(வயது35) என்ற சகநாட்டு தோழியுடன் இருந்தார்.

அவர், தொழில் அதிபரின் உதவியாளர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்தை வாங்கிவிட்டு அமெரிக்க டாலர்கள் இருப்பதாக ஒரு பையை அவர்களிடம் கொடுத்தார். பின்னர் அறைக்கு சென்று உடைமாற்றிவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார்.

வெளிநாட்டு பெண் கைது

ஆனால் வெகுநேரமாகியும் திரும்பி அவர் வரவில்லை. இந்தநிலையில் மரியாமோவும் அங்கு இருந்து செல்ல முயன்றார். இதையடுத்து சந்தேகமடைந்த உதவியாளர்கள் பையை திறந்து பார்த்தனர். அதில் அமெரிக்க டாலருக்கு பதிலாக கட்டுக்கட்டாக காகிதங்கள் மட்டுமே இருந்தன. இதையடுத்து அவர்கள் தப்பியோட முயன்ற மரியாமோவை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்கள் மரியாமோவை போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொழில் அதிபரை நூதன முறையில் ஏமாற்ற முயன்ற முக்கிய குற்றவாளியை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்