கொலை, கொள்ளைகளை ரோந்து போலீசார் தடுக்க வேண்டும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

கொலை, கொள்ளை சம்பவங்களை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தடுக்க வேண்டும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் கூறினார்.

Update: 2017-03-19 22:30 GMT

அரியாங்குப்பம்

புதுவை தெற்கு பகுதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், தெற்கு மற்றும் மேற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாருக்கான குறைகேட்பு கூட்டம் அரியாங்குப்பத்தில் நடந்தது. சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் தலைமை தாங்கினார். தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் வரவேற்றார். கூட்டத்தில், போலீசார் தெரிவித்த கோரிக்கைகள் வருமாறு:–

போலீஸ் பற்றாக்குறை

போக்குவரத்தை சீரமைக்கும் போலீசார் வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் நிழற்குடை அமைத்து தரவேண்டும். சீருடைகளை விரைவில் வழங்கவேண்டும். போலீஸ் நிலையத்தில் அனுபவம் வாய்ந்தவரை நிலைய அதிகாரியாக நியமிக்கவேண்டும். போலீசாரின் பற்றாக்குறை சரிசெய்யவேண்டும்.

போலீஸ் குடியிருப்பு பகுதியில் ஏ.டி.எம். வசதி ஏற்படுத்தவேண்டும், மின்தடை ஏற்பட்டால் தடையின்றி பணிகள் நடைபெறும் வகையில் கிராமப்புற போலீஸ் நிலையங்களுக்கு ஜெனரேட்டர் வசதி வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மகளிர் போலீசாருக்கு ஓய்வறை

இதற்கு பதிலளித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் பேசுகையில், ‘புதுவையில் கஞ்சா, லாட்டரி, விபசாரம் ஆகியவை தற்போது கட்டுக்குள் வந்துள்ளன. கொலை, கொள்ளை, வழிப்பறிகள் திடீரென்று நடப்பவை. இவற்றை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் முடிந்த அளவு தடுக்கவேண்டும். பொதுமக்கள் குறைகூறும் வகையில் போலீசாரின் செயல்பாடு இருக்கக்கூடாது. பாராட்டும்படியாக இருக்கவேண்டும். அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மகளிர் போலீசாருக்கு தனியாக கழிவறை மற்றும் ஓய்வறை ஏற்படுத்த அந்தந்த நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

போலீசாருக்கு பாராட்டு

தொடர்ந்து ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சிறப்பாக பணியாற்றியதாக தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். கூட்டத்தில், இன்ஸ்பெக்டர்கள் ராஜசங்கர் வல்லட், பாபுஜி மற்றும் சப்–இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்–இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 300–க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்