அருகி வரும் சிட்டுக்குருவி மீண்டும் சிறகடிக்குமா?

மனிதனின் வாழ்விடத்தை, தன்னுடைய புகழிடமாக்கி ஒட்டி உறவாடிய சிட்டுக்குருவி இனம்

Update: 2017-03-19 22:30 GMT

‘கீச்... கீச்... கீச்...’ என்ற செல்ல குரலில் காலையிலேயே சங்கீதம் பாடும் சிட்டுக்குருவியை வீடுகளில் காணோம். வீதிகளிலும் காணோம். மனிதனின் வாழ்விடத்தை, தன்னுடைய புகழிடமாக்கி ஒட்டி உறவாடிய சிட்டுக்குருவி இனம் இன்று, தனது இறுதி அத்தியாயத்தை எழுதி கொண்டு இருக்கிறது. தேடி பார்த்தாலும் கிடைக்காத அரிய இனமாக உருவெடுத்து இருக்கிறது. இதன் பின்னணியில் மனிதன் இருக்கிறான் என்பதுதான் வேதனையின் உச்சம். இன்று (திங்கட்கிழமை) உலக சீட்டுக்குருவி தினம். இந்த தினத்தில், அருகி வரும் அந்த இனத்தை மீட்டெடுக்க உறுதி எடுக்க வேண்டியது நமது கடமை.

சிட்டுக்குருவி இனம்

சிட்டு குருவி முட்டையிட்டு, குஞ்சு பொறிக்கும் இனத்தை சேர்ந்தது. இதில், ஆண், பெண் குருவிகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அவற்றின் உருவத்திலும், நிறத்திலும் சில வேறுபாடுகள் இருக்கும். இந்த குருவிகள் 50 கிராமுக்கும் குறைவாகவே உடல் எடை கொண்டவை. இவற்றுக்கு அடைக்கலான்குருவி, ஊர்குருவி என்ற பெயர்களும் உண்டு.

இவை, பொதுவாக மனிதனின் வாழ்விடத்தை சார்ந்தே இருக்கும். மரத்திலும், வீடுகளில் மறைவான பகுதிகளிலும் நார், வைக்கோல், தும்பு போன்ற பொருட்களை வைத்து கூடு கட்டும். மனிதனின் வாழ்விடத்தோடு நெருக்கம் காட்டினாலும், சிட்டுக்குருவியை செல்லப்பிராணியாக வளர்க்க இயலாது.

கண்கொள்ளா காட்சி

இத்தகைய சிட்டுக்குருவிகள், வீடுகளிலும், வீதிகளிலும் கூட்டம் கூட்டமாக கூடி ‘கீச்... கீச்’ என சத்தம் எழுப்பி கொஞ்சி விளையாடுவதை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். குறிப்பாக, பொழுது விடிந்ததும் கட்டிடங்களிலும், மின் கம்பிகளிலும் கூட்டமாக இருந்து விளையாடுவதை அடிக்கடி காண முடிந்தது.

அங்கும், இங்கும் சிறகடித்து பறந்து திரிந்த சிட்டுக்குருவிகளை இன்றைக்கு குடியிருப்பு பகுதிகளில் எங்குமே காணவில்லை. நகர்ப்புறங்களில் அவற்றை காண்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. கிராமப்புறங்களில் மட்டும் சில இடங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் தென்படுகின்றன.

திண்டுக்கல், தேனி மாவட்டத்திலும் சிட்டுக்குருவியை காண்பது கடினமாக இருக்கிறது. அதிலும் இந்த மாவட்டங்களின் நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவியின் வாழ்விடங்கள் இல்லை என்றே சொல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது. கிராமப்புறங்களுக்கு சென்றால் மட்டும், அரிதாக காணமுடிகிறது.

காலத்தின் கட்டாயம்

இதற்கு குடிசை, ஓட்டு வீடுகள் எல்லாம் இன்று நவீன வசதிகளுடன் கான்கிரீட் வீடுகளாக உருவெடுத்து, விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டதையும் காரணமாக சொல்லலாம். இவ்வாறு மனிதனின் வாழ்விடங்களில் ஏற்பட்ட மாற்றங்களால், சிட்டுக்குருவிகளின் வாழ்விடங்கள் சிதைக்கப்பட்டன. கூடு கட்டி இனத்தை பெருக்கவும், கொஞ்சி விளையாடவும் இடம் இன்றி அந்த இனம் மெல்ல மடியத்தொடங்கியது. இதன் விளைவு, அழிந்து வரும் இனங்கள் பட்டியலில் சிட்டுக்குருவிக்கு முதன்மையான இடம் கிடைத்து இருக்கிறது.

தினமும் அழிவு பாதையில் அடுத்தடுத்து அடியெடுத்து முன்னோக்கி பயணிக்கும் சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இருந்தாலும், விவசாய நாடான இந்தியாவில் மட்டுமின்றி, உலக நாடுகள் முழுவதிலும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

தற்போது, ‘சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா...’ ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு....’ ‘ஏய் குருவி, சிட்டுக்குருவி...’ என எழுதப்பட்ட சினிமா பாடல்கள் தான் அவ்வப்போது அந்த இனத்தை நினைவுப்படுத்துகின்றன.

கால சுழற்சியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து வாழ்க்கையை ஓட்டும் மனிதனுக்கு, சிட்டுக்குருவியின் அழிவை எண்ணிப்பார்க்க நேரம் இல்லை. ஆனால், அருகி வரும் அந்த இனத்தை காப்பாற்ற மனிதன் களம் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது:–

அழிவிற்கு காரணம் என்ன?

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டு இருக்கும் மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்றவை சிட்டுக்குருவி என்னும் சிற்றினத்தை அழிவுப்பாதையில் பயணிக்க செய்துள்ளன. இந்த இனத்தின் அழிவு தொடங்குவதை கடந்த 1990–ம் ஆண்டிலேயே அறிவியலாளர்கள் கண்டுபிடித்து தெரிவித்தனர்.

சிட்டுக்குருவிகள் அழிவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, நவீனமயமாகி வரும் வீடுகள், கட்டிடங்களில் சிட்டுக்குருவிகளால் கூடு கட்டி இருக்க இயலாமல்போகிறது. மேலும், நவீன யுகத்தில் எரிவாயுவின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த எரிவாயுவில் இருந்து வெளியேறும் ‘மெத்தைல் நைத்திரேட்’ எனும் வேதியல் கழிவுப்புகையால் காற்று மாசடைந்து குருவிகளுக்கு இரையாகும் பூச்சி இனங்கள் அழிகின்றன. வீட்டு தோட்டங்கள் மற்றும் வயல்களில் பயிர்களுக்கு பூச்சிகொல்லி மருந்துகளை தெளித்து பூச்சிகளை அழிக்கிறார்கள்.

செல்போனின் பங்கு

இதேபோல, பல சரக்கு கடைகள் அனைத்தும், பல்பொருள் அங்காடிகளாக உருவெடுத்து வருகின்றன. இங்கு பாலித்தீன் பைகளில்தான் தானியங்கள் அடைத்து வைத்து விற்பனை செய்கிறார்கள். இதனால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை. இதுபோன்ற காரணங்களினால் ஏற்படும் உணவு பற்றாக்குறை குருவிகளை பட்டினியில் வாட்டி சாகடிக்கின்றன.

இதைத்தவிர, சிட்டுக்குருவியின் அழிவுக்கு செல்போன் வருகை முக்கிய காரணமாக திகழ்கின்றன. அதாவது, செல்போன் வருகைக்கு பிறகுதான் குருவிகளின் அழிவு அதிகரிக்க தொடங்கியது. செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குருவியின் கருவை முட்டையிலேயே சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.

அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற வேண்டியது மனிதனின் கடமை. அதாவது, எல்லா உயிரினங்களும் சுற்றுச்சூழலின் உணவு சங்கிலியில் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. இந்த சங்கிலியில் ஓர் உயிரினம் அழியும்போது, அந்த சங்கிலியின் மொத்த அமைப்பும் சிதைக்கப்படும். எனவே, சிட்டுக்குருவி அழிவில் இருந்து மீட்கப்பட வேண்டிய ஓர் இனம்.

சிறகடிப்பது நிச்சயம்

மேலும், தமிழகத்தை அவ்வப்போது அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சலுக்கும், சிட்டுக்குருவி அழிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதாவது, சிட்டுக்குருவிகள், கொசுக்களின் முட்டைகளை விரும்பி உண்ணும். தற்போது, சிட்டுக்குருவிகள் இல்லாததால் கொசுக்கள் பெருகி நோயை பரப்பி வருகின்றன. எனவேதான் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற வேண்டியது அவசியமாகிறது.

ரசாயன உரங்களை தவிர்ப்பது, நீர் மற்றும் காற்று மாசுப்பாட்டை தடுப்பது, மரங்களை பாதுகாப்பது போன்ற செயல்களால் சிட்டுக்குருவி இனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். அவற்றை அழிவில் இருந்து மீட்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், இந்திய தபால் துறையும் சிட்டு குருவி சிறப்பு தபால் தலையை வெளியிட்டு உள்ளது. நாமும் நம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிட்டுக்குருவியின் ஓசை அனைத்து இல்லங்களிலும் ஒலிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. இதற்கான நடவடிக்கையில் அனைவரும் களம் இறங்கினால், சிட்டுக்குருவிகள் மீண்டும் குடியிருப்பு பகுதியில் சிறகடிப்பது நிச்சயம்.

இலக்கியங்களில் சிட்டுக்குருவி

தொல்காப்பியத்திலும், பாரதியார் கவிதைகளிலும் சிட்டுக்குருவியின் பெருமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. புறநானூற்று பாடலில் வரும் ‘குரீஇ’ என்ற சொல்லாலே மருவி குருவி என்று ஆனது. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் பயமின்றி வாழ்ந்த காரணத்தால் ‘மனையுறை குருவி’ என்று சிட்டுக்குருவியின் பெருமையை சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.

நினைவுகூற வேண்டிய தினம்

ஆண்டுதோறும் மார்ச் 20–ந்தேதி உலக சிட்டு குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சிட்டுக்குருவி இனம் அழிவை நோக்கி பயணிப்பதன் எதிரொலியாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் சவால்களை மக்களுக்கு எடுத்து கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் தொடங்கப்பட்டது. கடந்த 2010–ம் ஆண்டு முதல் உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சிட்டுக்குருவிகளை நினைவு கூற வேண்டியது அவசியம்.

சிட்டுக்குருவியின் சங்கீதம் கேட்க  என்ன செய்ய வேண்டும்?

சிட்டுக்குருவிகள் தென்பட்டால், அவற்றுக்கு தூய்மையான நீர், தானியங்களை வைக்கலாம். வீட்டின் மொட்டை மாடியில் ஓர் இடத்தில் அட்டை பெட்டியை வைத்து, அதில் சிறிய துவாரம் இடுங்கள். அதன் உள்ளே சிறிதளவு வைக்கோல், தேங்காய் நார்களை வைக்க வேண்டும். அதை சிட்டுக்குருவி தன்னுடைய இல்லமாக மாற்றி குடியேற வாய்ப்பு கிடைக்கும். மேலும், வீட்டுக்கு அருகில் செம்பருத்தி, மல்லிகை, முல்லை போன்ற செடிகளை வைக்க வேண்டும். அவை இருந்தால், உங்கள் வீட்டில் விரைவில் சிட்டுக்குருவிகள் குடியேறிவிடும். இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சிட்டுக்குருவிகளின் இனிய சங்கீதத்தை மீண்டும் கேட்க வாய்ப்பு பிறக்கும் என்பதில் அய்யமில்லை.

மேலும் செய்திகள்