இடைத்தேர்தலையொட்டி ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்புழக்கம் அதிகரித்து விட்டது டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்புழக்கம் அதிகரித்து விட்டதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

Update: 2017-03-19 22:45 GMT
நாகர்கோவில்,

பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நேற்று குமரி மாவட்டம் வந்தார். அதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தின் பொருளாதார நிலை மோசமாகி இருக்கிறது. நேரடி கடன் ரூ.3.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுடைய கடன்களையும் சேர்த்தால் தமிழக அரசின் கடன் ரூ.5.75 லட்சம் கோடியாக இருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயரிலும் கிட்டத்தட்ட ரூ.80 ஆயிரம் கடன் உள்ளது. நிதி நிலை மோசமாக காரணம் திறமையற்ற நிர்வாகமும், மோசமான நிதி நிலை செயல்பாடுகளும் தான்.

வல்லுனர்கள் குழு


வருவாயின் முக்கால் பங்கை இலவசங்களுக்கு கொடுத்து விட்டால் அரசு ஊழியர்கள் ஊதியம், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு எங்கிருந்து செலவு செய்ய முடியும்?. பொருளாதாரம் வளர்ச்சியடைந்திருந்தால் 2017–2018–ம் ஆண்டில் வருவாய் ரூ.1.65 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கும். ஆனால் நடப்பு ஆண்டின் வருவாய் ரூ.99 ஆயிரத்து 590 கோடி மட்டுமே. வரிவருவாய் 1 அங்குலம் உயர்ந்தால் இலவசத்திற்கான செலவு ஒரு மீட்டர் உயர்கிறது.

இதே நிலை நீடித்தால் பொருளாதாரம் திவாலாகும் நிலை ஏற்பட்டு விடும். எனவே தமிழகத்தின் நிதி செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய பொருளாதார வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும். அந்த குழு அளிக்கும் பரிந்துரைப்படி நிதி செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால் அந்த கடமையை தேர்தல் ஆணையம் சரியாக செய்யவில்லை. எனவே தேர்தலில் ஒப்புகை சீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும்.

பா.ம.க. போராட்டம்


தமிழகத்தில் உயர் கல்வி நிலையங்களாக செயல்பட வேண்டிய பல்கலைக்கழகங்கள் உயர் ஊழல் நிறுவனங்களாக மாறி வருகின்றன. பல்கலைக்கழகங்களில் கடந்த ஒரு ஆண்டில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லா பணிகளை நிரப்ப ரூ.250 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளன. இந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தமிழக கவர்னர் ஆணையிட வேண்டும். பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர் பணியிடங்களை நிரப்புதல் அவசியம்.

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள். அவர்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும். நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரம் உள்ள மதுக்கடைகளை வருகிற 31–ந் தேதிக்குள் மூட உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்படவில்லை எனில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம்


உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கு பணப்புழக்கம் அதிகமாகி விட்டது. ஒரு ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக ரூ.2 ஆயிரத்துக்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய 2 கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வழங்க திட்டமிட்டுள்ளன. எனவே ஆர்.கே.நகருக்கு வெளி மாநில பார்வையாளர்களையும், மத்திய படையையும் அனுப்ப வேண்டும்.

குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் அதிக கல்குவாரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால் அடுத்த 6 மாதங்களில் குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை காணாமல் போய் விடும். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். இல்லை எனில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்ய வேண்டும். ரப்பர் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை தேவை.

பணம் தான் காரணம்


ஆர்.கே.நகர் தொகுதியில் இதுவரை நடந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. பெற்ற வெற்றிக்கு பணம் தான் காரணம். திருமங்கலத்தில் வழங்கப்பட்டதை விட ஆர்.கே.நகரில் அதிகமாக பணம் வழங்கப்படுகிறது. இது தமிழ்நாட்டுக்கே சாபக்கேடு. இனி வருங்காலங்களில் எந்த தேர்தலாக இருந்தாலும் ஓட்டுக்கு பணம் வாக்காளரின் வங்கியிலேயே செலுத்தி விடுவார்கள். இதைப் பார்க்கும்போது ஆதார் கார்டு அவசியம் தான். தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். ஆர்.கே.நகரில் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதால் பா.ம.க. போட்டியிடவில்லை.

ஜெயலலிதா மரணம், கருணாநிதியின் வயோதிகம் ஆகியவற்றால் தமிழகத்தில் 2 வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப தகுதியான ஒரே கட்சி பா.ம.க. தான். இளம் தலைவர் அன்புமணி ராமதாஸ் தான். தமிழகத்தில் வறட்சி குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து 2 மாதங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. பல வி‌ஷயங்களில் தேசிய கட்சிகள் தமிழகத்துக்கு துரோகம் செய்கின்றன.

தலைகுனிவு


தமிழக அரசின் பட்ஜெட், ஒரு நிர்வாகத்தில் கணக்கு பார்ப்பவர் தயாரித்தது போல உள்ளது. பட்ஜெட்டை ஜெயலலிதா சமாதியில் வைத்த சம்பவம் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதா படங்களை அகற்ற வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக்கட்ட தமிழக அரசு அனுமதிக்காது என்று கூறினால் மட்டும் போதாது. டெல்லி சென்று அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில தலைவர் ஜி.கே.மணி உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்