மோட்டார் சைக்கிள்கள் மீது டெம்போ மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மீது டெம்போ மோதிய விபத்தில், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்று திரும்பிய என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியானார்கள்.
திருப்போரூர்,
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 21). காஞ்சீபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் தன்னுடன் படிக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் (21), நெல்லையை சேர்ந்த சசி என்ற சசிகுமார் (21), திண்டிவனத்தை சேர்ந்த பிரகாஷ் (21) ஆகியோருடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றார். அவர்கள் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.
3 பேர் பலிபின்னர் அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3½ மணி அளவில் கோவளத்தை அடுத்த செம்மஞ்சேரிகுப்பம் பகுதியில் வரும்போது எதிரே இளநீர் ஏற்றி வந்த சரக்கு வாகனம் (டெம்போ) கல்லூரி மாணவர்கள் சென்ற 2 மோட்டார் சைக்கிள்கள் மீதும் பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல், ரவிக்குமார், சசிகுமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பிரகாஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் கேளம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கு காரணமான டெம்போ டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
காரணம்இது குறித்து தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் விபத்தில் பலியான 3 மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை விரிவாக்கப்பணிகள் முழுமையாக நிறைவு பெறாததும், அதி வேகமாக செல்லும் வாகனங்களாலும் சாலையில் பாதுகாப்பு எச்சரிக்கை பலகைகள் அமைக்காததுமே இது போன்ற விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.