கல்குவாரி உரிமையாளர், அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அணி மாறுவேன் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ பேட்டி

கல்குவாரி உரிமையாளர், அரசு அதிகாரிகள் மீது 10 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அணி மாறுவேன் சூலூர் தொகுதி கனகராஜ் எம்.எல்.ஏ. பேட்டி

Update: 2017-03-19 22:45 GMT

கோவை,

கோவை அருகே கல்குவாரி உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் மீது 10 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அணி மாறுவேன் என்று சூலூர் தொகுதி கனகராஜ் எம்.எல்.ஏ. கூறினார்.

முற்றுகை போராட்டம்

கோவையை அடுத்த சுல்தான்பேட்டை பெரியகுயிலி என்ற இடத்தில் ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. சம்பவத்தன்று இங்கு பாறை உருண்டு விழுந்து 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.

இந்த நிலையில், விபத்து நடந்த கல்குவாரிக்கு, சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.கனகராஜ் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்த கனகராஜ் எம்.எல்.ஏ. பொது மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஊழல்

விபத்து நடந்த கல்குவாரியில் 400 அடி வரை குழி தோண்டி கல் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு வேலை பார்த்த 2 தொழிலாளர்கள் இறந்துவிட்டனர். முறையான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்காமல் தொழிலாளர்கள் பணி செய்ய அனுமதிக்கப்பட்டதால் தான் விபத்து நிகழ்ந்துள்ளது. ஆனால் கனிமவளத்துறை உதவி இயக்குனர், தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி யாரும் இங்கு வந்து ஆய்வு செய்யவில்லை. சாதாரணமாக விபத்து என்று வழக்குப்பதிவு செய்து பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் கொடுத்து அனுப்பி விட்டனர்.

ஆபத்தான இந்த கல்குவாரியில் இருந்து கல் எடுத்து மேலே வரும் லாரி தவறி கீழே விழுந்தால் சுக்கு நூறாகி விடும். இந்த கல்குவாரி மூலம் அரசுக்கு ரூ.50 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளது. அதிகாரிகள் மற்றும் போலீசார் லஞ்சம் பெற்றுக்கொண்டு தொழிலாளர்கள் விபத்தில் இறந்ததாக பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேறு அணிக்கு செல்வேன்

எனவே விபத்துக்கு காரணமான கல்குவாரி உரிமையாளர் மற்றும் இந்த சம்பவத்தில் முறையாக செயல்படாத அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு செல்வேன்.

வேறு அணி என்பது மக்களுக்கான அணி. நான் கடந்த 1987–ம் ஆண்டு முதல் கவுன்சிலர், யூனியன் சேர்மன், எம்.எல்.ஏ. என்று பதவி வகித்து வருகிறேன். ஆட்சியாளர்களை மக்கள் நம்புகிறார்கள். எனவே இது குறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரை சந்தித்து இந்த கல்குவாரியை மூட வலியுறுத்துவேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். இன்னும் 10 நாட்களுக்குள் குவாரி உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் நான் அணி மாறுவது உறுதி. மக்கள் விரும்பும் அணி எதுவோ அந்த அணிக்கு செல்வேன். இல்லை என்றால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன்.

பயப்பட மாட்டேன்

முதல்–அமைச்சரும் ஒரு எம்.எல்.ஏ. தான். அவரை கண்டு நான் பயப்பட மாட்டேன். 6 மாதம், 3 மாதத்துக்கு ஒரு முறை முதல் அமைச்சர் மாறலாம்.

மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடவும் நான் தயங்க மாட்டேன். இந்த குவாரி மட்டுமல்ல தொகுதியில் உள்ள மற்ற குவாரிகளிலும் சட்டத்திற்கு உட்பட்டு கல் எடுக்கப்படுகிறதா? அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா? இதுநாள் வரை எவ்வளவு யூனிட் கல் எடுக்கப்பட்டு உள்ளது? என அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அருண்குமார், ஆறுக்குட்டி, சின்னராஜ் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுள்ள நிலையில் சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் வேறு அணிக்கு மாறுவேன் என்று கூறி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அணி மாறுவதாக பேசியதை வாபஸ் பெறுகிறேன் கனகராஜ் எம்.எல்.ஏ. பல்டி

இந்த நிலையில் கனகராஜ் எம்.எல்.ஏ. நேற்று கேட்ட போது அவர் கூறியதாவது:–

எம்.எல்.ஏ. சொல்லியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் எம்.எல்.ஏ.வாக இருந்து என்ன பயன்?. எனக்கு வேறு வழி இல்லாததால் அவ்வாறு கூறினேன்.

ஆனால் நான் அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். எனவே நான் அணி மாறுவதாக பேசியதை வாபஸ் பெற்று கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்