சட்டமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்ய வருவாரா? மல்லிகார்ஜுன கார்கே பதில்
சட்டமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்ய வருவாரா? என்ற கேள்விக்கு மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு,
சட்டமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்ய வருவாரா? என்ற கேள்விக்கு மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்துள்ளார்.
பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே யாதகிரியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
வன்முறைகளை தூண்டியுள்ளார்உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா பெரும்பான்மை பெற்று, யோகி ஆதித்யநாத்தை முதல்–அமைச்சராக தேர்வு செய்துள்ளது. இது அவர்களின் உள்கட்சி விவகாரம் என்றாலும், அவர் இதற்கு முன்பு தன்னை ஒரு இந்துமத தலைவராக வெளிக்காட்டி செயல்பட்டுள்ளார். அவர் பலமுறை அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசி வன்முறைகளை தூண்டியுள்ளார்.
இது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை கவர்ந்திழுப்பதற்காக அரசியல் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவு ஆகும். ஜனநாயகத்தில் இத்தகைய தவறுகள் நடப்பது சகஜம்தான் என்பதற்கு உத்தரபிரதேச மாநில முதல்–மந்திரியை தேர்ந்து எடுத்திருப்பது ஒரு சாட்சி ஆகும். வரும் காலத்தில் முதல்–மந்திரியாக யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது. அவர் நல்லாட்சி வழங்கினால் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும்.
பிரியங்கா காந்தி வருவாரா?கோவா மாநிலத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்று பெரிய கட்சியாக இருக்கிறது. ஆனால் அங்குள்ள கவர்னர் பா.ஜனதாவை சேர்ந்த மனோகர் பாரிக்கருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கின் உத்தரவை கவர்னர் பின்பற்றியுள்ளார். உத்தரபிரதேசத்தில் தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் தான் காரணம் என்று கூறுவது தவறு.
மக்களின் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது பிரியங்கா காந்தி பிரசாரத்திற்கு வருவாரா? என்று கேட்கிறீர்கள். பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.