கூடலூரில் பல தலைமுறைகளாக கொண்டாடப்படும் காமன் பண்டிகை
கூடலூரில் பல தலைமுறைகளாக ரதி–மன்மதன் திருமணம் மற்றும் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கூடலூர்,
தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரம், பண்பாடுகள் அழிந்து வந்தாலும் அவற்றில் சில கலாசார நிகழ்வுகள் இன்று வரை மறக்காமல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் தாயகம் திரும்பிய தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இருப்பினும் கலாசாரம், பண்பாட் டினை மறக்காமல் இன்று வரை அவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
புராண வரலாற்று காலத்தில் சிவன் உமையவளுடன் இருக்கையில் அவரை மதிக்காமல் உமையவளின் தந்தை தச்சன் பெரும் யாகம் ஒன்றை நடத்தினார். இருப்பினும் உமையவளின் தந்தை தச்சன், சிவனை அழைக்காமல் அவராகவே முன்வந்து யாகத்தில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினார். ஆனால் சிவன் யாகத்தில் கலந்து கொள்ளவில்லை.
ரதி–மன்மதன் திருமணம்இதனால் சிவனின் தவத்தை கலைக்க மன்மதனை அனுப்பினார் தச்சன். இந்த சமயத்தில் ரதிக்கும்– மன்மதனுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் சிவனின் தவத்தை கலைக்க மன்மதன் தயார் ஆனார். அப்போது ரதி தனது கணவர் மன்மதனை தடுத்து நிறுத்தினாள்.
சிவனின் தவத்தை கலைத்தாள் கோபத்தில் சிவன் உங்களை எரித்து விடுவார் என ரதி, மன்மதனிடம் எச்சரித்தாள். மேலும் தனது கனவில் எமன் உள்ளிட்ட பூதகணங்கள் வருவதாக கூறி மன்மதனை தடுத்து பார்த்தாள். ஆனால் மன்மதன் அதை பொருட்படுத்தவில்லை. மாறாக சிவனின் தவத்தை கலைக்க கரும்பு வில்லில் அம்பு எய்தார். இதனால் தவம் கலைந்த சிவபெருமான் கடும் சினங்கொண்டு மன்மதனை அக்னியால் எரித்தார்.
காமன் பண்டிகைஇதனால் சிவனின் கால்களில் ரதி விழுந்து மன்றாடி தனது கணவரை மன்னித்து உயிர்த்து எழச்செய்யுமாறு வேண்டினாள். மேலும் சிவனும் மனம் இரங்கி மன்மதனை உயிர்பித்தார். இந்த வரலாற்று நிகழ்வை பல தலைமுறைகளாக கூடலூர் பகுதியில் உள்ள தாயகம் திரும்பிய மக்கள் பாரம்பரியமாக காமன் பண்டிகையாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் கொண்டாடி வருகின்றனர்.
கூடலூர் ஆமைக்குளம் கிராமத்தில் குறிப்பிட்ட புராண வரலாற்றை விளக்கும் வகையில் அப்பகுதி மக்கள் ரதி– மன்மதன் வேடமிட்டு காமன் பண்டிகை விழாவை நேற்று முன்தினம் நள்ளிரவு நடத்தினர். விடிய விடிய நடைபெற்ற இப்பண்டிகையில் கூடலூர் ஆமைக்குளம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.