சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தேக்கடி ஏரிக்கு புதிய படகு
இடுக்கி மாவட்டம் தேக்கடி ஏரியை பார்வையிட்டு ரசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
குமுளி,
தேக்கடி ஏரியை பார்வையிட்டு ரசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அவ்வாறு வருபவர்களின் வசதிக்காக ஏரியில் சுற்றுலா, வனத்துறை சார்பில் படகு சவாரி விடப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா துறைக்கு ஜலராஜா, தரங்கனி, சுந்தரி என்ற பெயர் கொண்ட 3 படகுகள் உள்ளன. இதில் ஜலராஜாவில் 126 இருக்கைகளும், தரங்கனியில் 54 இருக்கைகளும், சுந்தரியில் 30 இருக்கைகளும் உள்ளன. இதே போல் வனத்துறை சார்பில் தலா 60 இருக்கைகள் கொண்ட 2 படகுகள் இயக்கப்படுகின்றன.
இருந்த போதிலும் தேக்கடி ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதால், படகு சவாரிக்காக நீண்ட நேரம் சுற்றுலா பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சுற்றுலாத்துறை சார்பில் புதிய படகு தேக்கடி ஏரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது வாங்கப்பட்டுள்ள படகில் 120 இருக்கைகள் உள்ளன. பல லட்சம் செலவில் இந்த படகு வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்காக நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும். இது தவிர மேலும் ஒரு படகு அடுத்த மாதம் கொண்டுவரப்பட உள்ளது என்றனர்.