கடலூர், நெல்லிக்குப்பம் பகுதியில் மணல் கடத்தல்; 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் 3 பேர் கைது

கடலூர், நெல்லிக்குப்பம் பகுதியில் மணல் கடத்தியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-03-19 22:30 GMT

கடலூர்,

திருப்பாதிரிப்புலியூர்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று திருவந்திபுரம் பாலக்கரை பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக குண்டுஉப்பலவாடி மனோரஞ்சிதம்தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் குமார் (வயது 37) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே போல், நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாதன் தலைமையிலான போலீசார் முள்ளிகிராம்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெண்ணையாற்றில் 2 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்ததாக சகாதேவன்(49), மனோகர்(50) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பண்ருட்டி தாசில்தார் விஜயஆனந்த் தலைமையிலான வருவாய்த்துறையினர் நெல்லிக்குப்பம் அருகே சுந்தரவாண்டி கெடிலம் ஆற்றங்கரையோரம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மணல் கடத்தி வந்த 4 மாட்டு வண்டிகளை அவர்கள் மடக்கி பறிமுதல் செய்தனர். இது குறித்து மாட்டு வண்டி உரிமையாளர்களிடம் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்