சேலத்தில் வெவ்வேறு இடங்களில் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய 2 ரவுடிகள் கைது
சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கவுதமன் (வயது 27).
சேலம்,
சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கவுதமன் (வயது 27). இவர் நேற்று முன்தினம் இரவு சண்முகா நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தாதகாப்பட்டி கேட் பகுதியை சேர்ந்த ரவுடி கெத்தை சேகர்(32) என்பவர் கவுதமனை வழிமறித்தார். பின்னர் அவர் கத்தியை காட்டி மிரட்டி கவுதமனிடம் இருந்து ரூ.630–யை பறித்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரவுடி கெத்தை சேகரை கைது செய்தனர். கைதான கெத்தை சேகர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளன.
இதேபோல், உடையாப்பட்டி பஸ் நிறுத்தத்தில் அம்மாபேட்டையை சேர்ந்த செந்தில்குமார்(50) என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஐதராபாத் சேகர்(52) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டார். இதற்கு பணம் கொடுக்க மறுத்ததால் செந்தில்குமாருக்கு ரவுடி ஐதராபாத் சேகர் கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுதொடர்பாக அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரவுடி ஐதராபாத் சேகரை கைது செய்தனர். கைதான ஐதராபாத் சேகர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் பல போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளன.